
பாலி, ஜூலை 5 – நேற்றிரவு, பாலி படகு விபத்தில் காணாமல் போன 30க்கும் மேற்பட்டவர்களின் பட்டியலில் மலேசிய நாட்டைச் சார்ந்த ஃபௌசி அவாங் என்ற நபரும் இருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தற்போது இந்தோனேசிய தேடல் மற்றும் மீட்புப்பணி குழுவினர் தங்களின் தேடல் பணிகளை தீவிரப்படுத்தி வருவதோடு பாதிக்கப்பட்டவர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் இன்னும் வெளிவராத நிலையில், ஆறு பேர் மட்டும் உயிரிழந்துள்ளதாக அறியப்படுகின்றது.
மோசமான வானிலை, அதிக அலைகள் மற்றும் இயந்திர அறை கசிவு ஆகியவை இத்துயர சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், கப்பலின் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் வெளியேற்ற நடைமுறைகள் குறித்த முழுமையான விசாரணைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் உடல்களை அடையாளம் காணும் நடவடிக்கையிலும் மேல் விவரங்களைப் பெறுவதற்காகவும் கிலிமானுக்கில் கூடியிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.