
கோலாலம்பூர், ஜூலை-11 – நெடுஞ்சாலைகளில் சைக்கிளோட்டுவது இந்நாட்டில் தடைச் செய்யப்பட்ட ஒன்றாகும் என, புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமுலாக்கத் துறை நினைவுறுத்தியுள்ளது.
மலேசிய நெடுஞ்சாலைகள், லாரிகள், பேருந்துகள், மோட்டார் சைக்கிள்கள் என பல்வேறு மோட்டார் வாகனங்களின் பயன்பாட்டுக்கே முன்னுரிமைக் கொடுப்பதை, அத்துறையின் இயக்குநர் டத்தோ ஸ்ரீ மொஹமட் யுஸ்ரி ஹசான் பஸ்ரி சுட்டிக் காட்டினார்.
சைக்கிள்களை பொழுதுபோக்கு, போக்குவரத்து என இரு நோக்கங்களுக்கு இந்நாட்டில் பயன்படுத்தலாம்.
பொழுதுபோக்கு என்றால், அந்நடவடிக்கை அனுமதிக்கப்பட்ட பூங்காக்களிலோ அல்லது ஊராட்சி மன்றங்கள் உள்ளிட்ட தரப்புகள் ஏற்பாடு செய்யும் சைக்கிளோட்டும் நடவடிக்கைகளின் போதோ மேற்கொள்ளலாம் என்றார் அவர்.
எனவே, சைக்கிளோட்டிகளும், சாலைப் போக்குவரத்து விதிமுறைகளை முறைப்படி பின்பற்ற வேண்டும்.
தவறினால், குற்றத்தைப் பொருத்து 1,000 ரிங்கிட் முதல் 5,0000 ரிங்கிட் வரையிலான அபராதம் அல்லது 12 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
அண்மையில் ஜாலான் குவாலா சிலாங்கூர் – கோலாலம்பூர் சாலையில் சைக்கிளோட்டிகள் சிலர் பேருந்துப் பாதையை மறைத்ததாக சச்சரவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.