
மலாக்கா, ஜூலை-11 – சொல்லாமல் கொள்ளாமல் காய்கறி வாங்க சந்தைக்குச் சென்றதால் மனைவியை சரமாரியாகத் தாக்கி இரத்தக் காயம் விளைவித்த குற்றத்திற்காக, மலாக்கா ஆயர் குரோவில் குத்தகையாளருக்கு 1 நாள் சிறையும், 6,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக குற்றத்தை மறுத்த 36 வயது சீ யோங் ஃபெய் (See Yong Fei) இன்று மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வாக்குமூலத்தை மாற்றி குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
மனைவியின் கையில் குத்தியதோடு, பின்பக்கத்தில் எட்டி உதைத்து, பல இடங்களில் எலும்பு முறிவுக்கு அப்பெண் ஆளாக, அவ்வாடவர் காரணமாக இருந்துள்ளார்.
அதோடு மனைவியை வீட்டிலேயே அவர் அடைத்தும் வைத்துள்ளார்; எனினும், கணவர் வெளியில் சென்ற சமயம் பார்த்து, நண்பர் ஒருவருக்கு விஷயத்தை சொல்லி அம்மாது வீட்டிலிருந்து தப்பித்து போலீஸில் புகார் செய்தார்.
கடந்தாண்டு மே 7-ஆம் தேதி தாமான் டேசா பெர்தாமில் அக்குற்றத்தைப் புரிந்ததாக அந்நபர் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
6,000 ரிங்கிட் அபராதத்தை கட்டத் தவறினால் 6 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டுமென்றும் நீதிபதி உத்தரவிட்டார்.