
தாப்பா, ஜூலை-14 – பேராக், தாப்பா, கம்போங் பத்து 23 பள்ளத்தில் நேற்று முன்தினம் ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை கொலைச் சம்பவமாக போலீஸ் வகைப்படுத்தியுள்ளது.
அந்நபர் கூர்மையற்ற ஆயுதத்தால் அடித்தே கொல்லப்பட்டிருப்பது சவப்பரிசோதனையில் உறுதியாகியிருப்பதே அதற்குக் காரணம்.
தாக்கப்பட்டதில் உடல் முழுக்க மோசமான காயங்கள் இருந்ததை, ஈப்போ ராஜா பெர்மாய்சூரி பைனுன் மருத்துவமனையின் தடவியல் துறை கண்டறிந்துள்ளது.
இதையடுத்து கொலையாளிக்கு எதிரான தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக, தாப்பா போலீஸ் தலைவர் ஜொஹாரி யாஹ்யா தெரிவித்தார்.
முன்னதாக, 15 மீட்டர் ஆழ சாலையோர பள்ளத்தில் அவ்வாடவர் இறந்துகிடந்தார்.
ஒரு T சட்டையும் கருப்பு நிற அரைக்கால் சட்டையும் மட்டுமே அவர் அணிந்திருந்தார்.
உடன் அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லாத காரணத்தால், அடையாளத்தை உறுதிச் செய்ய இறந்தவரின் கை விரல் ரேகையை போலீஸார் எடுத்துச் சென்றனர்.