
கோலாலம்பூர், ஜூலை 14 – சமீபத்தில், முன்னாள் ராகா அறிவிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ராமை பற்றிய தவறான கூற்றுகள் புலன குழுக்களிலும், டிக்டோக் மற்றும் சமூக ஊடக தளங்களில் வெகுவாக பரவி வந்ததைத் தொடர்ந்து அவரின் உடல்நிலை பற்றிய தகவலைத் தற்போது மலேசிய மண்ணின் மைந்தன் முகநூல் பக்கம் வெளியிட்டுள்ளது.
சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு, முகத்தில் காயங்களுடன் ராம் இருப்பதை பார்த்தவுடன் வலைதளவாசிகள் அவர் குடிபோதையில் இருந்ததாகவும் மற்றவர்களால் தாக்கப்பட்டதாகவும் எதிர்மறை கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் உண்மை நிலையை தெளிவுபடுத்த ராம் தனிப்பட்ட முறையில் MMM குழுவைத் தொடர்பு கொண்டு தனக்கு ஏற்பட்ட கடும் காய்ச்சலினால் தான் கீழே விழுந்து முகப்பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளன என்று விளக்கமளித்துள்ளார்.
பின்பு நண்பர்கள் மற்றும் அருகில் இருந்தவர்களின் உதவியால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு உடனடி சிகிச்சையும் அளிக்கப்பட்டதென்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
MMM குழுவினரிடம் ராம் பகிர்ந்துள்ள CCTV காட்சிகளில் அவர் கீழே விழுந்து மயக்க நிலையில் இருப்பதைத் தெளிவாக காணமுடிகின்றது. மேலும், அவர் போதையில் இல்லை என்பதையும் அறிய முடிகின்றது.
தற்போது மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய ராம் மெல்ல மெல்ல குணமடைந்து வருவதாகவும் அவரின் தனிப்பட்ட வாழ்வியலைப் புரிந்து தவறான தகவல்களைப் பரப்புவதை நிறுத்த வேண்டுமென்றும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.