
திரெங்கானு, ஜூலை 18 – நேற்று, பண்டார் அல்-முக்தாஃபி பில்லா ஷா (AMBS) தாமான் மடானியிலுள்ள வீடு கட்டுமான பகுதிக்கு அருகிலிருக்கும் சாலையோரம் ஒன்றில் கட்டுமான பணி மேலாளர் ஒருவர் கழுத்து மற்றும் இடது மணிக்கட்டில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
40 வயதுடைய அப்பாதிக்கப்பட்டவர் அங்கு நின்றிருந்த வாகனத்தின் முன் பகுதி கதவுக்கு அருகில், தரையில் கிடந்ததாகக் டுங்குன் மாவட்ட காவல்துறைத் தலைவர், மைசுரா அப்துல் காதிர் தெரிவித்துள்ளார்.
அந்த உடலுக்கு அருகில் காகித ‘கட்டர்’ ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மரணத்திற்கான காரணத்தை அடையாளம் காணவும், குற்றவியல் கூறுகளின் சாத்தியத்தை ஆராயவும் தடயவியல் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அந்நபர் கோலாலம்பூர் தாமான் ஸ்ரீ ராம்பாயைச் சேர்ந்தவர் என்று முதல்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
கட்டுமான தளத்தில் இறந்தவருடன் ஒன்றாய் பணிபுரிந்த சக ஊழியர்கள் பாதிக்கப்பட்டவரின் உடலைக் கண்டுபிடித்து போலீசில் புகார் அளித்துள்ள நிலையில் மேல் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.