
கோலாலம்பூர், ஜூலை-19- பிரதமர் துறையின் கீழ் இயங்கும் மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவான மித்ராவின் செயல்பாடுகள் தொடர்பில், நேற்று மலாயாப் பல்கலைக்கழகத்தில் ஒரு வட்டமேசைக் கூட்டம் நடைபெற்றது.
NIAAT – ஆகமம் அணி மலேசியா ஏற்பாட்டில் நடைபெற்ற அக்கூட்டத்தில் மித்ரா தலைவர் பி.பிரபாகரனும் பங்கேற்றார்.
மித்ராவைப் பற்றி மேலும் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவுவதை இந்த வட்டமேசைக் கூட்டம் நோக்கமாகக் கொண்டிருந்தது.
முக்கியமாக 100 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு உட்பட மித்ரா நிதி விநியோகம் குறித்து சமூக ஊடகங்களில் அண்மையக் காலமாக அரசல் புரசலாகப் பேசப்படும் விஷயங்கள் குறித்து தெளிவுப்படுத்தப்பட்டது.
38 பேராளர்கள், அரசு சாரா அமைப்பினர், மாணவர்கள், முன்னாள் இராணுவ வீரர்கள் உள்ளிட்டோரும் இதில் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை முன்வைத்தும், கேள்விகளைக் கேட்டு தெளிவும் பெற்றனர்.
தவிர, மித்ரா உருவாக்கப்பட்டதன் வரலாறு, அதன் நோக்கம், அது சந்திக்கும் சவால்கள், அவற்றைச் சமாளிப்பது எப்படி என்பன பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
வெளியில் பேசப்படும் விஷயங்கள் எந்தளவுக்கு உண்மையானவை என்பது பங்கேற்பாளர்களுக்கு உரிய முறையில் தெளிவுப்படுத்தப்பட்டதாக, ஏற்பாட்டார்களான அருண் துரைசாமி கூறினார்.
4 அம்சங்கள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
இந்தியச் சமூகத்துக்கான மித்ராவின் பங்கு, இத்தனை ஆண்டுகள் கழித்தும் சமூகத்தின் மத்தியில் அதன் நம்பகத்தன்மைக் கேள்விக்குறியாக உள்ளது, அது சந்திக்கும் சவால்கள் மற்றும் தூரநோக்கு வரையப்பட வேண்டியதன் அவசியம் ஆகியவையே அந்த 4 முக்கிய அம்சங்களாகும்.
கலந்துரையாடல்களில் கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில், மித்ராவின் 100 மில்லியன் ரிங்கிட் நிதி, சரியான நேரத்தில் சரியான நோக்கங்களுக்குப் போய் சேருமென்ற நம்பிக்கை பிறந்துள்ளதாகவும் அருண் குறிப்பிட்டார்.
இந்நிலையில், விரைவிலேயே இந்திய அரசியல் கட்சிகளுடன் இதே போன்ற கலந்துரையாடல் நடைபெறும் என அவர் கூறினார்.
பிரபாகரனே நேரில் வந்து பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டு தெளிவுப்படுத்தியதாக, மாணவர்கள் உள்ளிட்ட பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.