
ஜோகூர் பாரு, ஜூலை-23- ஜோகூரின் வருமான வரி வருவாயில் 25 விழுக்காட்டை அம்மாநிலத்திடமே திருப்பித் தருமாறு, ஜோகூர் இடைக்கால சுல்தான் துங்கு மக்கோத்தா துங்கு இஸ்மாயில் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
அடுத்த மாதம் செயல்படத் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த பாசீர் கூடாங் மருத்துவமனையின் திறப்பு தாமதமாகியுள்ளது, அவரை அப்படிக் கேட்க வைத்துள்ளது.
இவ்வாண்டு ஆகஸ்ட் முதல் கட்டங்கட்டமாக செயல்படத் தொடங்கவிருந்த பாசீர் கூடாங் மருத்துவமனையின் திறப்பு தற்போது அடுத்தாண்டு ஜனவரிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் தாம் ஏமாற்றமடைந்திருப்பதாக, ஃபேஸ்புக் பதிவில் TMJ சொன்னார்.
இது தவிர, சுல்தான் இஸ்கண்டார் கட்டிடம் மற்றும் சுல்தான் அபு பாக்கார் வளாகத்தில் autogate தானியங்கி முறையில் ஏற்பட்டுள்ள கோளாறு, வெள்ளத் தடுப்புத் திட்டங்களில் காணப்படும் தாமதங்கள் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை உட்படுத்திய சிக்கல்கள் உள்ளிட்ட அண்மையச் சம்பவங்களை துங்கு இஸ்மாயில் சுட்டிக்காட்டினார்.
ஜோகூர் மாநிலத்திற்கு அதிக நிதி சுயாட்சி தேவைப்படுவதற்கு இவை முக்கியக் காரணங்களாக உள்ளதாக அவர் சொன்னார்.
“எனவே, இந்த வரி வருமானத்தின் மூலம், நாங்கள் மத்திய அரசாங்கத்தை சுமைப்படுத்தத் தேவையில்லை; அல்லது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து விட்டு ஒப்புதல்களைப் பெற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை” என்றார் அவர்.
வருமான வரி வருவாயில் 25 விழுக்காடு திரும்பக் கிடைக்கும் பட்சத்தில், ஜோகூர் தனது சொந்தக் காலில் நிற்க முடியும் என TMJ மேலும் கூறினார்.