
கோலாலாம்பூர், ஜூலை-31- இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ராவின் கீழ் ஒவ்வொரு ஒப்புதலும், வெளிப்படைத்தன்மையாக இருப்பது உறுதிச் செய்யப்படுகிறது.
அதனால் தான், PMO எனப்படும் பிரதமர் அலுவலகத்தால் அத்திட்டங்கள் ஒருங்கிணைப்பு மற்றும் ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதாக, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெளிவுப்படுத்தினார்.
ஒவ்வொரு விண்ணப்பமும் பிரதமர் துறையின் கண்காணிப்பு, நிதி மற்றும் நெறிமுறைப் பிரிவால் கடுமையாக வடிகட்டப்படுவதாக, மடானி அரசாங்கத்தில் இந்தியச் சமூக விவகாரங்களுக்குப் பொறுப்பானவருமான ரமணன் சொன்னார்.
இந்தியர்கள் குறிப்பாக B40 வர்கத்தினரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திச் செய்ய ஏதுவாக சேவையளிப்பு முறை வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதால், பிரதமரே அதனை நேரடியாகக் கண்காணிக்கிறார்.
இந்தியர்களுக்காக அரசாங்கம் ஒதுக்கும் நிதி, அச்சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவல்ல திட்டங்களுக்கே பயன்படுத்தப்படுவதை அன்வார் உறுதிச் செய்ய விரும்புவதாக ரமணன் கூறினார்.
அரசு நிறுவனங்களின் வேலைகளைப் பிரதமர் துறை எடுத்துக் கொள்ளவில்லை; மாறாக, அரசாங்கக் கொள்கைகளுக்கு ஏற்ப, மக்களுக்கு உயர் தாக்கங்களைக் கொண்டு வருவதை உறுதிச் செய்யவே PMO விழைகிறது என, மித்ரா சிறப்புப் பணிக்குழுவின் முன்னாள் தலைவருமான ரமணன் சொன்னார்.
மித்ராவின் கீழ் இவ்வாண்டு இதுவரையில் 16 உயர் தாக்கத் முன்னெடுப்புகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
அதே சமயம், ஓரே மாதிரியான திட்டங்களைத் தவிர்க்கவும், வளங்களை விவேகமாகக் கையாளவும் ஏதுவாக, குறிப்பிட்ட சில திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் பிரதமர் அலுவலகம் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தது.