
கோலாலம்பூர் – ஆகஸ்ட் 5 – UPM எனப்படும் மலேசியா புத்ரா பல்கலைக்கழகத்தில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மூன்று மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியருக்கு காயம் ஏற்படுத்தியதற்காக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பஸ் ஓட்டுநருக்கு ஏழு நாட்கள் சிறைத்தண்டனையும் 8,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.
44 வயதான Mohamad Hamir Masrudin அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக ஏழு மாத சிறைத் தண்டனையை அனுபவிக்கும்படி மாஜிஸ்திரேட் Nur Nastasya Mohtarudin உத்தரவிட்டார்.
பொதுமக்களுக்கு ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக Hamir மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
ஆகஸ்டு 2 ஆம் தேதி , மதியம் மணி 12.18க்கு Jalan Persiaran Universiti 1, UPMமில் அவர் இக்குற்றத்தை புரிந்ததாக 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 42 (1) இன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டார்.
அலட்சியத்துடனும், மிகவும் வேகமாகவும் மற்றும் ஆபத்தான முறையில் ஓட்டுநர் பஸ் ஓட்டியதில் அந்த பஸ் ஒரு மரத்தில் மோதியதில் மூன்று சிறார்களும் ஒரு ஆசிரியரும் காயம் அடைந்ததால் அவருக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என இதற்கு முன் அரசு தரப்பு துணை வழக்கறிஞர் Nurain Syafiqeen Mohd Rozi நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார்.
30 மாணவர்கள் மற்றும் உடன் சென்ற ஐந்து ஆசிரியர்கள் பயணம் செய்த bus ஒரு coklat தொழிற்சாலையிலுருந்து செர்டாங் MAEPS விவசாய கண்காட்சி நிலையத்திலுள்ள பிராணிகள் பூங்காவை நோக்கி சென்ற போது விபத்துக்குள்ளானது.