
கோலாலம்பூர், ஆகஸ்ட்-15 – நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதமர் பதவிகளை வகிக்கும் தகுதியை சட்டப்படி டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இழந்திருப்பதாக, வழக்கறிஞர் பி.வேதமூர்த்தி கூறிக்கொள்வதை தேசிய சட்டத் துறைத் தலைவர் மறுத்துள்ளார்.
சிறையிலிருந்த அன்வாருக்கு 2018-ல் அரச மன்னிப்பு வழங்கப்பட்ட போது, தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை விதிக்கப்படுவதிலிருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டதாக எந்த இடத்திலும் கூறப்படவில்லை;
எனவே அன்வார் பொதுத் தேர்தலில் தம்புன் தொகுதியில் வெற்றிப் பெற்றதும் பின்னர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் செல்லாது என அறிவிக்கக் கோரி வேமூர்த்தி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
அது குறித்து சட்டத் துறைத் தலைவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், அன்வாரின் குற்றத்தையும் தண்டனையையும் மன்னிக்கும் அதிகாரத்தை 15-ஆவது மாமன்னர் பெற்றிருந்ததை சுட்டிக் காட்டினார்.
அவ்வகையில் அன்வாருக்கு அப்போதைய மாமன்னர் முழு அரச மன்னிப்பு வழங்கிய ஆணையில், அன்வார் எந்தவொரு குற்றத்தையும் புரியாதவராகக் கருதப்படுவார் என தெளிவாகக் குறிப்பிடப்பட்டது.
ஆகவே, தேர்தலில் போட்டியிடும் தகுதியை அன்வார் இழந்தார் என்ற பேச்சே இங்கு எழவில்லை என சட்டத் துறைத் தலைவர் தெளிவுப்படுத்தினார்.
தவிர, ஒருவரின் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் குறித்த எந்தவொரு வழக்கும் தேர்தல் பெட்டிஷன் மூலமே தாக்கல் செய்யப்பட வேண்டும்.
அதுவும் 1954-ஆம் ஆண்டு தேர்தல் குற்றங்கள் சட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் மட்டுமே அதனை தாக்கல் செய்ய முடியுமென சட்டத் துறைத் தலைவரின் அலுவலகம் சுட்டிக் காட்டியுள்ளது.