
மலாக்கா, ஆகஸ்ட் 20 – மலாக்கா சுங்கை உடாங்கிலுள்ள தங்கும் விடுதியோடு கூடிய பள்ளி ஒன்றில் (Sekolah Asrama), 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் பகடிவதைக்கு ஆளான குற்றச்சாட்டில் இரு மாணவர்கள் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிகளுக்கு ஓராண்டு சிறை தண்டனையும் 2,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுவதாக மலாக்கா தெங்கா மாவட்ட காவல்துறைத் தலைவர் கிறிஸ்டோபர் பாடிட் கூறியுள்ளார்.
மேலும் பகடிவதையில் காயமடைந்ததாக புகார் அளித்த மாணவரின் மருத்துவ அறிக்கைக்காக காவல்துறை இன்னும் காத்திருக்கின்றது என்பதையும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் உரிமைகள் மாநில அரசின் முதன்மை கவனமாக உள்ளதால், விசாரணை முழுமையாக நடத்தப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில கல்வி, உயர்கல்வி மற்றும் மத விவகாரத் துறைத் தலைவர் டத்தோ ரஹ்மத் மாரிமான் கூறியுள்ளார்.
முன்னதாக, அந்த பள்ளியில் 20க்கும் மேற்பட்ட மாணவிகள் விடுதிக்கு தாமதமாக திரும்பியதற்காக 30 நிமிடங்கள் வாத்துப்போல் நடக்கும் தண்டனை கொடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் சில மாணவிகளுக்கு வீக்கம் மற்றும் சிராய்ப்பு காயங்களை ஏற்படுத்தியதோடு மூத்த மாணவர்களின் பழிவாங்கும் அச்சத்தால் பலர் புகார் செய்யத் துணியவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.