
உத்தா, செப்டம்பர்-12 – அமெரிக்காவின் பிரபல உத்தா (Utah) பல்கலைக் கழகத்தில் பொது விவாதத்தின் போது அரசியல் ஆர்வலர் சார்லி கெர்க்கை (Charlie Kirk) சுட்டுக் கொன்ற சந்தேக நபர் பிடிபட்டுள்ளான்.
ஏற்கனவே 2021-ல் அங்கு ஒரு பருவம் படித்தவன் எனக் கூறப்படும் டைலர் ரோபின்சன் (Tyler Robinson) என்ற 22 வயது இளைஞனே அவன் ஆவான்.
குடும்பம் மற்றும் நண்பர்களின் உதவியோடு அவன் பிடிபட்ட நிலையில், Utah சிறையில் தற்போது அவன் அடைக்கப்பட்டுள்ளான்.
இதுவரையிலான விசாரணையில் அவன் தனியாளாகவே அத்தாக்குதலை மேற்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
துப்பாக்கியால் சுட்டு விட்டு ரோபின்சன் கூரையிலிருந்து இறங்கி ஓடும் வீடியோவை போலீஸ் முன்னதாக வெளியிட்டிருந்தது.
அதிபர் டோனல்ட் ட்ரம்ப்பின் நெருங்கிய கூட்டாளியும், Turning Point USA எனும் பழமைவாத சிந்தனைக் குழுவின் இணை நிறுவனருமான 31 வயது கெர்க், புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதையடுத்து அமெரிக்காவில் இத்தகைய அரசியல் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென கண்டனக் குரல்கள் அதிகரித்துள்ளன.