
சுங்கை பட்டாணி, செப்டம்பர்-15 – PASTI என்றழைக்கப்படும் பாலர் பள்ளிகளின் முக்கிய நோக்கம் மதக் கல்வியை கற்பிப்பதே என்றாலும், மாணவர்களுக்கு சீனர்களின் மாண்டரின் மற்றும் தமிழ் மொழிகளை அறிமுகப்படுத்தும் யோசனையை பரிசீலிக்க முடியுமென, பாஸ் இளைஞர் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த மொழிகள் இறைவன் படைத்தவை; எனவே பல்வேறு இனங்களை அணுகுவதற்கு அவற்றை அறிந்து கொள்வது அவசியம் என, அப்பிரிவின் தலைவர் Afnan Hamimi Taib Azamudden வலியுறுத்தினார்.
PASTI பள்ளிகளில் மாண்டரின் பேசும் ஆசிரியர்களும், தமிழ் பேசும் இந்திய மாணவர்களும் உள்ளதால், இது புதிதான விஷயம் அல்ல.
இருப்பினும், அடிப்படை முக்கியம் மதக் கல்வி; அதன் பிறகு தான் பிற மொழிகள் சேர்க்கப்பட வேண்டும் என்றார் அவர்.
PASTI என்பது Pusat Asuhan Tunas Islam என்பதன் சுருக்கமாகும்; இது மாணவர்களுக்கு இஸ்லாமிய அடிப்படையிலான ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வியை வழங்குவதற்காக அமையப்பெற்ற பாஸ் கட்சிக்குச் சொந்தமான பாலர் கல்வி மையங்களின் வலையமைப்பாகும்.
முன்னதாக, DAP கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் (Lim Lip Eng), தமிழ் – சீன மொழிகள் மீது பாஸ் உண்மையிலேயே அக்கறைக் கொண்டிருந்தால் முதலில் PASTI பாலர் பள்ளிகளில் மாண்டரின் மற்றும் தமிழை அது கற்பிக்கட்டுமே என சவால் விடுத்தார்.
தேசிய கல்விக் கொள்கைக்குள் இவ்விரு மொழிகளையும் சேர்த்து ஒற்றுமையை வளர்க்க வேண்டும் என, பாஸ் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் முன்னதாக
பரிந்துரைத்திருந்தார்; அதற்கு பதிலடியாக லிம் லிப் எங் அவ்வாறு பேசியிருந்தார்.