
பட்டவொர்த், செப்டம்பர்-17,
நாட்டின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை காக்க, மத தீவிரவாதத்தையும், குறுகிய சிந்தனையிலான வட்டார மனப்பான்மையையும் மக்கள் முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
பினாங்கு, பட்டவொர்த் PICCA மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 62-ஆவது மலேசிய தின விழாவில் உரையாற்றிய போது அவர் அவ்வாறு சொன்னார்.
இன, மத, பழங்குடி மற்றும் பிராந்திய தீவிரவாதங்களை ஒழிக்க வேண்டியது அவசியம் என அவர் குறிப்பிட்டார்.
சுதந்திரம் என்பது வெறும் காலனித்துவ ஆட்சி மாற்றம் மட்டுமல்ல; நல்லாட்சி, சமத்துவ பொருளாதாரம் மற்றும் நீதியை உறுதிச் செய்வதற்கான போராட்டமாகும்.
மேலை நாடுகளைப் போல அல்லாமல், தொழில்நுட்பம், பசுமைத் தொழில் மற்றும் புத்தாக்கத்தின் மூலம் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும் அதே சமயம் கலாசாரம் மற்றும் நெறிமுறைகளையும் மலேசியர்கள் நிலைநாட்ட வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
பினாங்கு ஆளுநர், முதல்வர், சபா – சரவாக் மாநில பிரதிநிதிகள், தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் உள்ளிட்ட பிரமுகர்களும் இந்த கண்கவர் மலேசிய தின விழாவில் பங்கேற்றனர்.