Latestமலேசியா

நெகிரி செம்பிலானில் பள்ளி வளாகத்தில் கழிவு நீர் குழிக்குள் விழுந்து 9 வயது மாணவன் பரிதாப மரணம்

சிரம்பான், செப்டம்பர்-28,

நெகிரி செம்பிலான், லெங்கேங்கில் உள்ள ஒரு தேசிய ஆரம்பப்பள்ளியில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தில், 9 வயது மாணவன் கழிவு நீர் குழியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான்.

சனிக்கிழமை காலை சுமார் 9 மணியளவில் விளையாட்டு போட்டி நடைபெற்ற நேரத்தில், பள்ளி வளாகத்தில் இருந்த 1.8 மீட்டர் ஆழமான கழிவுநீர் குழியில் அவன் தவறி விழுந்தான்.

அச்சிறுவன் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரின் மகன் எனத் தெரியவந்துள்ளது.

சிறுவன் fiber இரகத்திலான மூடியை மிதித்தபோது அது உடைந்து அவன் குழிக்குள் விழுந்ததாக நம்பப்படுகிறது.

முதலில் சிறுவனின் தொப்பியும், காலணியும் மிதந்தபோது அவன் உள்ளே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் ஒரு கிராமவாசி உள்ளே குதித்து மாணவனை மேலே கொண்டு வந்தார்.

சுமார் 10 நிமிடங்கள் கழிவுநீர் குழியில் சிக்கியிருந்த சிறுவனுக்கு, அடுத்த 30 நிமிடங்கள் CPR மூலம் உயிர் காப்பு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், அவன் மரணமடைந்ததை சிரம்பான் துவாங்கு ஜாஃபார் மருத்துவமனை உறுதிச் செய்தது.

இது ஒரு விபத்து என தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக நெகிரி செம்பிலான் போலீஸ் தலைவர், டத்தோ Alzafny Ahmad கூறினார்.

எந்தவித குற்ற அம்சங்களும் கண்டறியப்படவில்லை.

மரணத்திற்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய, ரெம்பாவ் மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனை நடைபெறும்.

எனவே எந்த யூகங்களையும் எழுப்ப வேண்டாமென அவர் பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.

இவ்வேளையில், பள்ளியின் விளையாட்டுப் போட்டியைத் தொடக்கி வைக்க வந்திருந்த லெங்கேங் சட்டமன்ற உறுப்பினர் Datuk Mohd Asna Amin-னும், சம்பவ இடம் விரைந்தார்.

கழிவு நீர் குழாய் அமைந்துள்ள பள்ளிக் கட்டம் கடந்தாண்டு தான் திறப்பு விழா கண்டது; அப்படியானல் அதற்கு CF சான்றிதழ் ஏற்கனவே கிடைத்திருக்க வேண்டும் என்றார் அவர்.

இருந்தாலும் விசாரணைக்குப் பிறகே, கவனக்குறைவு உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படும் என அவர் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!