
கோலாலம்பூர், அக்டோபர் -6,
புக்கிட் டாமான்சாராவில் 60 அடுக்கு மாடி உயரமான கட்டிடத்தை அமைக்கும் திட்டம் குறித்த இறுதி முடிவை கோலாலம்பூர் ஊராட்சி மன்றம் (DBKL) இதுவரை எடுக்கவில்லை என்று அறிவித்துள்ளது.
DBKL வெளியிட்ட அறிக்கையில், பொதுமக்கள் கலந்துரையாடல் மற்றும் முழுமையான தொழில்நுட்ப மதிப்பீடு முடிந்த பின் மட்டுமே தீர்மானம் எடுக்கப்படும் என்று தெளிவுபடுத்தியது.
மேலும், கோலாலம்பூர் உள்ளூர் திட்டம் 2040-இன் கீழ், குறிப்பிட்ட தொழில்நுட்பத் தரங்களும், போக்குவரத்து தாக்க மதிப்பீடு, புவியியல் ஆய்வு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு, சமூக தாக்க மதிப்பீடு உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப அறிக்கைகளும் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.
அத்துடன், தேசிய மின்சாரம் (TNB), நிலம் மற்றும் சுரங்க அலுவலகம், நீர்ப்பாசனத் துறை, தீயணைப்பு துறை, பொதுப் போக்குவரத்து நிறுவனம், நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் பல தொடர்புடைய துறைகள் அளிக்கும் கருத்துகள் மற்றும் நிபந்தனைகளையும் திட்டம் பின்பற்ற வேண்டும் என DBKL வலியுறுத்தியது.
கடந்த வெள்ளிக்கிழமை, புக்கிட் டாமான்சாராவில் ஜாலான் செமான்தான் (Jalan Semantan) பகுதியில் அமைக்கப்பட உள்ள இந்த மேம்பாட்டு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 200-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புக்கிட் டாமான்சாரா ஹவுஸ் ஓனர்ஸ் அசோசியேஷன் ஏற்பாடு செய்த அந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் அபாயம் மற்றும் அப்பகுதி சூழ்நிலை பாதிக்கப்படும் என்ற அச்சத்தை வெளிப்படுத்தினர்.