
கோலாலம்பூர், அக்டோபர்-12,
தேசிய முன்னணியில் ம.சீ.ச மற்றும் ம.இ.காவின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ள நிலையில், கூட்டணி தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி இரு கட்சிகளையும் கடந்த வாரம் 2,3 தடவை சந்தித்து பேசியுள்ளார்.
அதன் போது, அண்மைய நிலவரங்களை தாம் கேட்டறிந்ததாக அவர் சொன்னார்.
ம.இ.காவை பெர்சாத்து பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதாக அதன் போது தெரிவிக்கப்பட்டதாகக் கூறிய துணைப் பிரதமர், யாரும் யாரையும் சந்திக்கலாம், ஆனால் முடிவு என வரும்போது தேசிய முன்னணி உச்சமன்றத்திடம் தெரிவிக்க வேண்டும் என்றார்.
தமது தரப்பு நடத்திய ஆய்வில், தேசிய முன்னணியை விட்டு வெளியேறுவதில் அவ்விரு கட்சிகளின் தொண்டர்களுக்கு விருப்பம் இல்லை என்றே தெரியவந்துள்ளது; ஆக, சில தலைவர்களின் பேச்சு தொண்டர்களின் எண்ணத்தை பிரதிபலிக்கவில்லை என, பெயர் குறிப்பிடாமல் சாஹிட் தெரிவித்தார்.
ஒற்றுமை அரசாங்கம் அமைந்த போது அமைச்சரவையில் இடம் பெறப்போவதில்லை என முடிவு எடுத்ததே அவ்விரு கட்சிகள் தான்; இப்போது திடீரென பதவி கேட்டால் எப்படி? அடுத்த தேர்தல் வரை அவர்கள் காத்திருக்க வேண்டும் என சாஹிட் கூறினார்.
மனஸ்தாபம் இருப்பதாகக் கூறப்பட்டாலும் தேசிய முன்னணி உச்சமன்றக் கூட்டங்கள் மற்றும் கூட்டணி நிகழ்ச்சிகளில் அவ்விரு கட்சிகளும் பங்கேற்கின்றன.
தேசிய முன்னணியில் ம.சீ.சவும் ம.இ.காவும் அம்னோவின் நீண்டகால பங்காளிகள் என வருணித்த சாஹிட், அது தனித்தன்மைமிக்க உறவு என்றார்.
தேசிய முன்னணியில் ம.சீ.ச, ம.இ.கா இரு கட்சிகளுக்கும் உரிய மரியாதை கிடைப்பதில்லை என சில ஆண்டுகளாகவே புகைச்சல் உள்ளது.
இந்நிலையில் இவ்வாண்டு இறுதியில் நடைபெறும் பொதுப்பேரவைகளில் தத்தம் எதிர்காலம் குறித்து அவை முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது