எல்லை கடந்த அரசியல் ‘தலையீடு’; சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம் – பாஸ் கட்சி இடையே மோதல்

சிங்கப்பூர், அக்டோபர்-16,
சிங்கப்பூரின் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் கே. சண்முகம், அரசியலில் மதம் மற்றும் இனம் கலப்பது ஆபத்தானது என்றும், அனைத்து கட்சிகளும் அதனை தெளிவாக மறுக்க வேண்டும் என்றும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய பேச்சு, எல்லை கடந்த அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலேசிய மதபோதகர் நூர் டெரோஸ் (Noor Deros) மற்றும் சில பாஸ் கட்சித் தலைவர்கள் சிலர், இவ்வாண்டு சிங்கப்பூர் தேர்தலில் வாக்காளர்களை மத அடிப்படையில் ‘மூளைச்சலவை’ செய்ய முயன்றதாக சண்முகம் குறிப்பிட்டார்.
இது போன்ற ‘தலையீடுகள்’ சிங்கப்பூரின் சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கும் என்றும், எனவே அனைத்து சாராரும் அடையாள அரசியலை வெறுத்து ஒதுக்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலடி கொடுத்துள்ள, பாஸ் பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ தாக்கியுடின் ஹசான், சண்முகம் தங்கள் கட்சியை ‘அரசியல் பேய்’ போல காட்டி, சிங்கப்பூரின் உள்நாட்டு பிரச்சினைகளிலிருந்து கவனத்தை திசை திருப்ப முயல்கிறார் என குற்றம்சாட்டினார்.
சாதாரண எல்லைத் தாண்டிய கருத்துக்களை ஏதோ பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் போல சித்தரிப்பது அரசியல் குறுக்கு வழி எனவும், இது உண்மையான பிரச்னைகளைத் தீர்க்காமல் தற்காலிக அரசியல் ஆதாயத்தைத் தேடும் வேலை எனவும் தாக்கியுடின் சாடினார்.
இந்த பரஸ்பர குற்றச்சாட்டுகள், சிங்கப்பூர்–மலேசிய உறவுகளில் புதிய அரசியல் பதற்றத்தை உருவாக்கியுள்ளன.