சிங்கப்பூரில் அறிவிக்கப்படாத போகிமான் கார்டுகள் சாங்கி விமான நிலையத்தில் பறிமுதல்

சிங்கப்பூர், அக்டோபர் 16 –
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, சாங்கி சர்வதேச விமான நிலையம் Terminal 1-இல் சுங்கத்துறை (Customs) அதிகாரிகள் நடத்திய சோதனையில், அறிவிக்கப்படாத போகிமான் வர்த்தக கார்டுகளை கொண்டு வந்த 25 வயது சிங்கப்பூர் இளைஞர் ஒருவர் வசமாக பிடிபட்டார்.
சோதனையின்போது அந்த நபர் அறிவிக்க வேண்டிய பொருட்கள் எதுவும் இல்லை” என தெரிவித்திருந்தார். ஆனால் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விரிவான சோதனையில், அவரது பைகளில் பல்வேறு வகையான போகிமான் வர்த்தக கார்டுகள் மறைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த கார்டுகளின் மொத்த மதிப்பு சுமார் 30,000 சிங்கப்பூர் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் “Pokémon Center Limited Fukuoka” எனும் நான்கு சிறப்பு பதிப்பு பெட்டிகளும் அடங்குகின்றன.
இந்த வழக்கு மேல் விசாரணைக்காக சிங்கப்பூர் சுங்கத்த்துறையினரிடம் (Singapore Customs) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சிங்கப்பூர் குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடி அதிகாரிகள் (ICA) வெளியிட்ட அறிக்கையில், வெளிநாட்டில் வாங்கப்பட்ட பொருட்கள் சுங்க வரி மற்றும் பொருள் சேவை வரி (GST) விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருந்தால் அவற்றை கட்டாயம் அறிவிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு நினைவூட்டினர்.
மேலும், தங்களின் பொருட்கள் அறிவிக்கப்பட வேண்டியவையா என்பது பற்றித் தெளிவில்லாத பயணிகள், சிவப்பு வழி (Red Channel) அல்லது சிங்கப்பூர் சுங்க வரி அலுவலகத்தில் அறிவிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது