
பாங்காக், அக்டோபர் -27,
தாய்லாந்தில் பணம் எடுக்கச் சென்ற பெண் ஒருவருக்கு பெரும் அதிர்ச்சி சம்பவம் காத்திருந்ததை அப்பெண் முன்னதாகவே அறிந்திருக்க வாய்ப்பில்லை.
உள்ளூர் மருத்துவமனையில் பணிபுரியும் அவர் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து 900 பாட் எடுக்க முயன்றபோது, பணத்திற்கு பதிலாக பாம்பு ஒன்று பாய்ந்து வந்ததைக் கண்டு அம்மாது பீதியடைந்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த பெண் உடனே பின்வாங்கியதால், ஏடிஎம் பணத்தை மீண்டும் உள்ளே இழுத்துக்கொண்டது. காவல்துறை விரைந்து வந்து விசாரிக்கையில், 100 பாட் நோட்டு மட்டும் வெளியே இருந்தது என்றும் மீதமுள்ள பணமும் பாம்பும் இயந்திரத்துக்குள்ளே இருந்தன என்றும் அறியப்பட்டது.
அதிக விஷமுடைய இந்த பாம்பு தாய்லாந்தின் ஆபத்தான ஏழு பாம்புகளில் ஒன்றாகும். இதன் கடியால் திசுக்கள் நசிந்து, இரத்த அழுத்தம் தாறுமாறாகக் குறைந்து உயிரிழப்பும் ஏற்படலாம்.
இந்நிலையில், வங்கி உடனடியாக ஏடிஎம் இயந்திரத்தை மூடி, ஆய்வு செய்யும் பணியைத் தொடங்கியது.



