இராட்சத மீன் முதல் பழங்கள் வரை; ‘கலை மரபு’மிக்க கானா நாட்டு சவப்பெட்டிகள்

அக்ரா, அக்டோபர்-30,
ஆப்பிரிக்க நாடான கானாவில் (Ghana) மரணத்திற்கும் கலைக்கும் இடையே ஒரு வித்தியாசமான மரபு நிலவுகிறது.
‘கற்பனை சவப்பெட்டிகள்’ எனப்படும் இந்த மரபு, இறந்தவர்களின் வாழ்க்கையையும் கனவுகளையும் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட தனித்துவமான சவப்பெட்டிகளைக் குறிக்கிறது.
இங்கே, சவப்பெட்டிகள் நாம் பார்க்கும் சாதாரண பெட்டிகள் போல் அல்லாமல் மீன்கள், பழங்கள், பறவைகள், கார்கள், அல்லது புத்தகங்கள் போன்ற உயிரோட்டமான வடிவங்களில் செய்யப்படுகின்றன.. அதுவும் அவரவர் வேலைக்கேற்ப!
அதாவது ஒரு மீனவர் மீன் வடிவில், ஒரு தச்சர் மரக்கட்டையாக, அல்லது ஓர் ஆசிரியர் புத்தக வடிவில் சவப்பெட்டியில் அடக்கம் செய்யப்படுவார்.
கானாவின் திறமையான கைவினை கலைஞர்கள் இச்சவப்பெட்டிகளை உருவாக்கி, அந்நாட்டின் கலாச்சாரத்தில் பெருமையுடன் இடம்பிடித்துள்ளனர்.
இது கானா மக்களின் வெறும் சடங்கு மட்டுமல்ல…. மாறாக வாழ்க்கையை கொண்டாடும் கலை வடிவம் என்றும் கருதப்படுகிறது.



