
புத்ராஜெயா, நவம்பர்-1,
அரசாங்க ஊழியர்கள் இனி அலுவலக நேரங்களில் அல்லது கூட்டங்களில் டை அணிவது கட்டாயமில்லை என பொதுச் சேவைத் துறையான JPA அறிவித்துள்ளது.
நேற்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் அவ்வறிவிப்பு இடம்பெற்றுள்ளது.
இது, பணியாளர்கள் வசதியாகவும் நவீனமாகவும் பணியாற்ற உதவும் நடவடிக்கையாகும்.
உள்ளூர் தட்பவெப்பநிலையோடு ஆற்றல் திறன் மற்றும் பாதுகாப்பின் அவசியத்தை கருத்தில் கொண்டும் இந்த உத்தரவு வெளியிடப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் மூலம் அலுவலக சூழலில் தளர்வான மற்றும் இணக்கமான பணிப்பண்பு உருவாகும் என அரசாங்கம் நம்புகிறது.
இருப்பினும், வெளிநாட்டு விருந்தினர்களை வரவேற்கும் விழாக்கள் போன்ற சில அதிகாரப்பூர்வ நிகழ்வுகளுக்கும், வெளிநாட்டு பிரமுகர்கள் அல்லது தலைவர்கள் பங்கேற்கும் அனைத்துலகக் கூட்டங்கள் அல்லது மாநாடுகளுக்கும் டைகள் தேவைப்படும்.
அதே சமயம், சில அதிகாரப்பூர்வ நிகழ்வுகளுக்கு டைகள் அணிய வேண்டியதன் அவசியத்தை அமைச்சுகளும் துறைத் தலைவர்களும் குறிப்பிடலாம்.
என்றாலும் குழப்பத்தைத் தவிர்க்க, அழைப்புக் கடிதம் அல்லது மின்னஞ்சலில் அறிவுறுத்தல் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என JPA கூறியது.



