
வாஷிங்டன், நவம்பர்-2,
அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், தனது மனைவி உஷா வான்ஸின் இந்து மத நம்பிக்கை குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு கடும் தொனியில் பதிலளித்துள்ளார்.
சிலரின் கருத்துக்கள் “அருவருப்பானவை” என்றும், “கிறிஸ்தவ விரோதம்” என்றும் அவர் சாடினார்.
“தற்போதைக்கு மதம் மாறும் எந்தத் திட்டமும் உஷாவிடம் இல்லை, ஆனால் ஒருநாள் அவர் கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன்” என வான்ஸ் சொன்னார்.
என்றாலும், இருவரும் இணைந்து பிள்ளைகளை கிறிஸ்தவ நம்பிக்கையில் வளர்ப்பது என முடிவுச் செய்துள்ளனர்.
ஒருவேளை மதம் மாறாவிட்டாலும் ஒரு பிரச்னையுமில்லை; உஷா மீதான தனது அன்பும் பாசமும் ஒருபோது மாறாது எனக் கூறிய வான்ஸ், மதக் கலப்புத் திருமணங்கள் பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கை மூலம் வலுப்படுவதாகச் சொன்னார்.
கடந்த ஏப்ரல் மாதம் ஜே.டி. வான்ஸ் குடும்பத்துடன் உஷாவின் பூர்வீகமான இந்தியா சென்றபோது, மனைவி மற்றும் குழந்தைகளுடன் சில ஆன்மிகத் தலங்களுக்கும் சென்றிருந்தார்.
தவிர உஷா மற்றும் வான்ஸ் திருமணத்தில் இந்து சமயச் சடங்குகள் பின்பற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம், மதச்சார்பற்ற திருமணங்கள் மற்றும் மதங்களுக்கிடையிலான மரியாதை குறித்து அமெரிக்க அரசியலில் மீண்டும் விவாதத்தை கிளப்பியுள்ளது.



