
புத்ராஜெயா, நவம்பர்-3,
டிசம்பரில் நடைபெற திட்டமிடப்பட்ட War Zone Championship அல்லது போர் மண்டல விளையாட்டுப் போட்டியை, தாங்கள் அங்கீகரிக்கவில்லை என இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சான KBS தெளிவுப்படுத்தியுள்ளது.
அப்போட்டி குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் 2 இளம் சிறுவர்கள் ஆக்ரோஷமாக நடந்துகொள்வதைக் காட்டும் வீடியோ வைரலாகி சமூக ஊடகங்களில் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில் இந்த அறிக்கை வந்துள்ளது.
பள்ளிகளில் பகடிவதை சம்பவங்கள் அதிகரித்து வரும் இந்த நேரத்தில், இது போன்ற விளையாட்டுகள் அதுவும் சிறார்களை உட்படுத்திய நிகழ்வை விளம்பரப்படுத்தும் ஏற்பாட்டாளர்களின் நோக்கங்கள் குறித்து, X தளத்தில் முன்னதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன.
அதற்கு பதிலளித்த KBS, எந்தவொரு விளையாட்டு நிகழ்வும், குறிப்பாக அனைத்துலகப் பங்கேற்பை உள்ளடக்கியிருந்தால், விளையாட்டு ஆணையரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பதை சுட்டிக் காட்டியது.
நாட்டில் விளையாட்டுகளின் நெறிமுறை மற்றும் பாதுகாப்பை நிலைநாட்ட, ஆணையரின் ஒப்புதல் இல்லாமல் நடத்தப்படும் எந்தவொரு அனைத்துலக விளையாட்டு நிகழ்வுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் அமைச்சு எச்சரித்தது.
Muay Thai மற்றும் குத்துச்சண்டை போட்டிகளை உள்ளடக்கிய இந்த போர் மண்டல விளையாட்டுப் போட்டி, டிசம்பர் 6-ஆம் 7-ஆம் தேதிகளில் நெகிரி செம்பிலானில் உள்ள N9 அரங்கில் நடைபெறவுள்ளது.
இதில் மலேசியா மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த சுமார் 54 போட்டியாளர்களும், இந்தியா, சீனா மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த அழைப்புப் போட்டியாளர்களும் பங்கேற்பார்கள் என, போட்டி வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



