
அலோர் ஸ்டார், நவம்பர்-10,
கெடா மாநிலத்தின் அந்தஸ்து மற்றும் பினாங்குடனான அதன் உறவு குறித்த பிரச்னை தொடர்பாக, மாநில அரசாங்கம் சட்ட நடவடிக்கைக்குத் தயாராகி வருகிறது.
நீதிமன்ற நடவடிக்கையைத் தொடங்க ஏதுவாக ஒரு சட்டக் குழு இறுதிச் செய்யப்பட்டு வருவதாக, மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சனுசி நோர் கூறினார்.
கெடா சுல்தான் சுல்தான் சலேஹுடின் சுல்தான் படில்ஷாவின் கவலைகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சனுசி கூறினார்.
குத்தகை தொடர்பான விஷயங்கள் உட்பட, இந்தப் பிரச்சினை வெளிப்படையாக தெளிவுபடுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை கெடா சுல்தான் சுட்டிக் காட்டியுள்ளார்.
“எனவே பினாங்கு கெடாவுக்குச் சொந்தமானது என்பதை நிரூபிக்க, நாங்கள் ஒரு வலுவான சட்ட அணியை அமைத்து நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்” என மாநில சட்டமன்றத்தில் பேசிய போது சனுசி சொன்னார்.
பினாங்கு மாநிலம், 2023-ஆம் ஆண்டுக்கான வாடகைத் தொகையாக RM10,000 வழங்கியுள்ளது.
ஆனால், கெடா அரசு இது போதாது எனக் கூறி, நில உரிமை மற்றும் வரலாறு அடிப்படையில் அத்தொகையில் முழுமையான பரிசீலனை தேவை என வலியுறுத்துகிறது.
இந்த விவகாரம், மாநிலங்களுக்கு இடையிலான வரலாற்று உரிமை மற்றும் அரசியல் பரிமாற்றங்களை மீண்டும் எழுப்பியுள்ளது



