
காஜாங், நவ 12 – செமினி, பண்டார் தாசேக் கெசுமா, தேசிய தொடக்கப் பள்ளிக்கு அருகே உள்ள சாலையில் சுமார் நான்கு மீட்டர் ஆழத்தில் பாதளக் குழி ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த சாலை மூடப்பட்டது.
நேற்று காலை அதிகாரிகள் மற்றும் காஜாங் நகரான்மைக் கழகத்திற்கு தகவல் தெரிவிப்பதற்கு முன்பே இந்த சம்பவம் சாலைப் பயனர்களால் கவனிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த விவகாரம் குறித்து தங்களுக்கு தகவல் கிடைக்கப் பெற்றதைத்
தொடர்ந்து போக்குவரத்து பயணர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு அந்த சாலை மூடப்பட்டதாக காஜாங் நகரான்மைக் கழகத்தின் தொழில்துறை திட்டப் பிரிவு மற்றும் பொது உறவு இயக்குநர் கமாருல் இஸ்வான் சுலைமான் ( Kamarul Izlan Sulaiman) தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் கழிவுநீர் பயன்பாட்டு குழாய் பாதைக்கு அருகில் குழி ஏற்பட்டிருப்பது விசாரணையின் மூலம் கண்டறியப்பட்டது. மேல் நடவடிக்கை எடுப்பதற்காக இந்த விவகாரம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு காஜாங் மாவட்ட திட்டமிடல் பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.
பாதாளக் குழி ஏற்பட்ட இடத்தையும் அதன் உள்ளே தண்ணீர் பாய்வதை காட்டும் 30 வினாடிகளைக் கொண்ட வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.



