
சுங்கை பட்டாணி, நவம்பர் 14 – சுங்கை பட்டாணியில், கணவரின் அடி உதைக்குப் பயந்து ஓடும் காரிலிருந்து வெளியே குதித்த பெண்ணின் செயல், சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
அப்பெண் ‘Sungai Lalang’ பெட்ரோல் நிலையத்தில் இருந்தபோது, அவரின் கணவர் வலுக்கட்டாயமாக அவரைக் காரில் ஏற்றி சென்றதாகவும், பயணத்தின் போது கடுமையான வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டதென்று குவாலா மூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஹன்யான் ரம்லான் (Asisten Komisioner Hanyan Ramlan) தெரிவித்தார்.
வாகனம் Jalan Lencongan சாலையில் பயணித்து கொண்டிருந்தபோது, அப்பெண்மணி பயணிகள் பக்க கதவைத் திறந்து திடீரென வெளியே குதித்தார். கீழே விழுந்தெழுந்தபோதும், அவர் உடனே எழுந்து ஓட தொடங்கி விட்டார். அவரின் கணவர் அப்பெண்ணைத் துரத்தி கொண்டு ஓடுவதையும் காணொளியில் தெளிவாக காண முடிந்தது.
அத்தம்பதியர் இருவரும் கடந்தாண்டு அக்டோபரில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கணவரால் அடிக்கடி தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பெண் கணவரிடமிருந்து தற்போது ஒரு மாதமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
புகாரின் அடிப்படையில், அந்த ஆடவர் போலீஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.



