ஜோகூரில் அடாவடி; ஓடும் காரின் மீது கல்லை வீசி கண்ணாடியை உடைத்த மோட்டார் சைக்கிளோட்டி

இஸ்கண்டார் புத்ரி, டிசம்பர்-2,
ஜோகூரில் சிங்கப்பூரியர் என நம்பப்படும் ஒரு மோட்டார் சைக்கிளோட்டி, சாலையில் கல்லை விட்டெறிந்து கார் கண்ணாடியை உடைத்த வீடியோ வைரலாகியுள்ளது.
நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு மேல், ஜோகூர் பாரு, தாமான் புக்கிட் இண்டா நோக்கிச் செல்லும் பெர்லிங் டோல் சாவடி அருகே, இரண்டாவது ஜோகூர் பாலமான Second Link நெடுஞ்சாலையில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக அறியப்படுகிறது.
கல்லடி பட்டு காரின் பின்பக்க கண்ணாடி உடைந்ததாகக் கூறி அதன் உரிமையாளர் புகார் செய்திருப்பதை, இஸ்கண்டார் புத்ரி போலீஸ் தலைவர் எம் குமராசன் உறுதிப்படுத்தினார்.
எந்த முன்னனெச்சரிக்கையும் வழங்காமல் திடுதிப்பென பாதையை மாற்றியதால், மோட்டார் சைச்கிளோட்டியை நோக்கி 30 வயது அந்த காரோட்டி ஹார்ன் அடித்துள்ளார்.
இதனால் சினமடைந்த மோட்டார் சைக்கிளோட்டி காரைத் துரத்திச் சென்று கல்லை எறிந்துள்ளார்.
கார் கண்ணாடி உடைந்ததில் நல்ல வேளையாக அதன் ஓட்டுநருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.
இந்நிலையில் ஆபத்தாக வாகனமோட்டியது மற்றும் நாசவேலை ஆகியப் பிரிவுகளின் கீழ் விசாரணை நடைபெறுவதாக குமராசன் கூறினார்.



