கனமழை எச்சரிக்கை; தொடர் சேதங்களுக்கு தயாராகும் இலங்கை

கொழும்பு, டிசம்பர்-2,
ஆசியா முழுவதும் கொட்டித் தீர்த்த மழை பேரழிவை ஏற்படுத்தி, நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், இலங்கை தொடர் பாதிப்புக்குத் தயாராகி வருகிறது.
அந்த தீவு நாட்டில் வரும் நாட்களிலும் அடைமழை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளதே அதற்குக் காரணம்.
முன்னதாக டிட்வா (Ditwah) புயல் கொண்டு வந்த கனமழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக இலங்கையில் ஆறுகள் பெருக்கெடுத்து, ஏராளமான நகரங்கள் மூழ்கின.
வெள்ளத்தில் மாண்டோரின் எண்ணிக்கை 200-ரை நெருங்கி வருகிறது; இன்னும் நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை.
லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
நிலச்சரிவு அபாயமும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மீட்பு குழுக்கள் பல பகுதிகளை அடைய முடியாமல் தவிக்கின்றன; மக்களை வெளியேற்றவும் மீட்பு உதவிக்காகவும் இராணுவமும் அனுப்பப்பட்டுள்ளது.
இப்படி இந்த டிட்வா புயல் சீற்றத்தின் தாக்கமே அடங்காத நிலையில், மேலும் கனழை பெய்தால் என்னாகுமோ என இலங்கை மக்கள் பெரும் அச்சத்திலும் கவலையிலும் உள்ளனர்.
சேதங்களை எதிர்கொள்ள, அரசாங்கமும் முன்னெச்சரிக்கை மற்றும் தயார் நிலையை முடுக்கி விட்டுள்ளது.
இந்த பருவமழை காலத்தில் இந்தியா, வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் சென்னையிலும் கனமழை பெய்து வருகிறது.
இந்தோனேசிய பெருவெள்ளத்தில் 300 பேரும் தாய்லாந்தில் 160 பேரும் உயிரிழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.



