
கோலாலாம்பூர், டிசம்பர்-2 – சபா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து 8 இடங்களிலும் தோல்வியடைந்த DAP, இதனால் கட்சிக்குள் ஒரு பெரும் நம்பிக்கை நெருக்கடி ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொண்டுள்ளது.
வாக்காளர்களின் தீர்ப்பு, DAP மற்றும் பக்காத்தான் ஹராப்பான் மீதுள்ள தெளிவான அதிருப்தியை காட்டுவதாக, தேர்தல் படுதோல்விக்குப் பிறகான மத்திய செயற்குழு அவசரக் கூட்டத்திற்குப் பிறகு DAP பொதுச் செயலாளர் அந்தோணி லோக் கூறினார்.
சபா மக்களின் தீர்ப்பையும் அதன் மூலம் அவர்கள் உணர்த்த வரும் செய்தியையும் புரிந்துகொண்டு, அடுத்த 6 மாதங்களில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் இணைந்து சீர்திருத்தங்களை மடானி அரசாங்கம் விரைவுபடுத்தும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இதற்கிடையில், சபாவில் GRS தலைமையில் அமைந்துள்ள ஒற்றுமை அரசாங்கத்தில் DAP, எந்தப் பதவிகளையும் ஏற்காது.
வாக்காளர்கள் தங்களை நிராகரித்திருப்பதால், மத்திய செயற்குழு அம்முடிவை எடுத்திருப்பதாக அந்தோணி லோக் சொன்னார்.
இந்த படுதோல்வியின் மூலம், சபாவில் 2004-ங்காம் ஆண்டுக்குப் பிறகு முதன் முறையாக சட்டமன்றத்தில் DAP-யின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போயுள்ளது.
இது அக்கட்சிக்கு வாக்காளர்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் பெரும் சவாலாக மாறியுள்ளது.



