கனடாவில் மருத்துவ அலட்சியம்: 8 மணி நேரம் சிகிச்சை இன்றி தவித்த 44 வயது இந்தியர் உயிரிழப்பு

எட்மண்டன், டிசம்பர்-29,
கனடாவின் எட்மண்டன் நகரில், மருத்துவ அலட்சியம் காரணமாக 44 வயது இந்திய வம்சாவளி ஆடவர் ஒருவர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடுமையான நெஞ்சு வலியுடன் மருத்துவமனைக்குச் சென்றவர், அவசர சிகிச்சை வழங்கப்படாமல் சுமார் 8 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலைக்கு உள்ளானார்.
இந்த நேரத்தில், மருத்துவப் பணியாளர்கள், குறிப்பாக தாதியர்கள், அவருக்கு போதிய கவனம் செலுத்தவில்லை என குடும்பத்தினர் தற்போது குற்றம் சாட்டுகின்றனர்.
நீண்ட நேரம் சிகிச்சையின்றி தவித்த நிலையில், அவர் இதயமுடக்கம் ஏற்பட்டு உயிரிழந்தார்.
இந்த சம்பவம் கனடாவில் மட்டுமின்றி, உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனையின் பொறுப்புணர்வு குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
குறிப்பாக கோடீஸ்வரர் இலோன் மாஸ்க் சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்ததால், இவ்விவகாரம் மேலும் கவனம் பெற்றுள்ளது.
சுகாதாரத் துறை அரசாங்கத்தால் நடத்தப்படும்போது இப்படித்தான் நடக்கும்; இது மோட்டார் வாகனத் துறையைப் போலவே மந்தமாகவும், கெடுபிடிகளோடும், உரிய பதில் இல்லாததாகவும் மாறும்” என்ற ரீதியில் அவர் பதிவிட்டுள்ளார்.
இலோன் மாஸ்க்கின் பதிவுக்குக் கலவையான கருத்துகள் வந்த வண்ணம் உள்ளன.
உயிரிழந்த பிரசாந்த் ஸ்ரீ குமார், மனைவி மற்றும் 3 குழந்தைகளை விட்டுச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக கனடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



