வெனிசுவலாவுக்குள் புகுந்து அதிபர் மடுரோவைத் ‘தூக்கிய’ அமெரிக்கா; “டிவி நிகழ்ச்சி போல” நேரலையைப் பார்த்ததாக ட்ரம்ப் பேச்சு

வாஷிங்டன், ஜனவரி-4,
தென்னமரிக்க நாடான வெனிசுவலா தலைநகர் கரகாஸில் (Caracas) நேற்று அமெரிக்கா நடத்திய அதிரடி தாக்குதலில், அதிபர் நிக்கோலஸ் மடுரோவும் (Nicolás Maduro) அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸும் (Cilia Flores) கைதுச் செய்யப்பட்டனர்.
அவர்கள் பின்னர் நியூ யோர்க்கில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மடுரோ, ஒரு ‘போதைப்பொருள் நாட்டை’ வழிநடத்துவதாகவும், தேர்தலில் முறைகேடு செய்ததாகவும் குற்றம் சாட்டிய சில நாட்களில் அமெரிக்கா இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
அதே சமயம், வெனிசுவலா வசமிருக்கும் உலகின் மிகப் பெரிய எண்ணெய் சேமிப்பைக் கைப்பற்றுவதே அமெரிக்காவின் நோக்கம் என மடுரோ குற்றம் சாட்டியிருந்தார்.
பதவி விலகுவது தான் மடுரோவுக்கு நல்லது என்றும் அவரின் நாட்கள் எண்ணப்படுவதாகவும் அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் கடந்த மாதமே எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், இந்த நடவடிக்கையில் அமெரிக்காவின் சிறப்பு படைகள் ஈடுபட்டன.
அதன் போது 2 அமெரிக்க வீரர்கள் காயமடைந்தனர்; குறைந்தது 40 வெனிசுவலா இராணுவத்தினர் மற்றும் பொது மக்கள் உயிரிழந்தனர்.
இதையடுத்து வெனிசுவலாவில் தேசிய அவசர காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தாம் அந்த அதிரடி முற்றுகையை வாஷிங்டனிலிருந்து நேரடியாக பார்த்ததாகவும், அது “ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி” போல இருந்ததாகவும் டோனல்ட் ட்ரம்ப் கூறினார்.
மேலும், “உண்மையான இராணுவ அதிகாரிகள்” தமக்கு தெரிவித்ததுபோல், இப்படியொரு நடவடிக்கையை வேறு எந்த நாடும் செய்ய முடியாது எனவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
இந்நிலையில், “பாதுகாப்பான, சரியான மற்றும் நியாயமான மாற்றம்” உறுதிச் செய்யப்படும் வரை அமெரிக்கா வெனிசுலாவை “வழி நடத்தும்” என ட்ரம்ப் கூறியுள்ளார்.
எப்படி வழிநடத்துவோம் என்பதை தெளிவுப்படுத்தா விட்டாலும், அமெரிக்கக் குழு தலைமையில் அது மேற்கொள்ளப்படலாம் என அவர் சொன்னார்.
அதே சமயம், அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் வெனிசுலாவின் “உடைந்த உட்கட்டமைப்பை” சரிசெய்து “மீண்டும் உற்பத்தி செய்யத் தொடங்கும்” என்றார் அவர்.
ஒரு நாட்டுக்குள் புகுந்து அதன் அதிகாரமிக்கத் தலைவரை சிறைபிடித்த அமெரிக்காவின் செயல் உலகளவில் கவனம் பெற்றுள்ளது.
அமெரிக்க இராணுவத்தின் ஆற்றலையும் அதனைச் சுற்றியுள்ள அரசியல் நாடகத்தையும் இச்சம்பவம் வெளிக்காட்டுவதாக பார்வையாளர்கள் கூறுகின்றனர்.



