
கங்கார், ஜன 7 – கங்கர் மற்றும் கோலா பெர்லீஸில் உள்ள ஏழு வளாகங்களில் தெனாகா நேசனல் நிறுவனத்திற்கு சொந்தமான
15.5 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான மதிப்புள்ள மின்சாரத்தை பிட்கொய்ன் கும்பல் களவாடியது கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் சீன பிரஜை ஒருவன் கைது செய்யப்பட்டான். கங்கார் மற்றும் கோலா பெர்லீஸில் உள்ள ஏழு இடங்களில் பிட்கொய்ன் ( Bitcoin ) நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட ஏழு வளாகங்களில் அதிகப்படியான மின்சார பயன்பாடு காரணமாக ஏற்பட்டதாக நம்பப்படும் தொடர்ச்சியான மின் தடைகள் ஏற்பட்டு வருவதாக குடியிருப்பாளர்களிடமிருந்து தெனாகா நேசனல் பெர்ஹாட் புகார்களைப் பெற்றதைத் தொடர்ந்து அந்த வளாகங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக பெர்லீஸ் போலீஸ் தலைவர் டத்தோ முகமட் அப்துல் ஹலிம் ( Muhammad Abdul Halim ) தெரிவித்தார்.
அந்த ஏழு வளாகங்களும் சட்டவிரோத மின்சார இணைப்புகளில் ஈடுபட்டுள்ளன என்பதை ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டன. அருகிலுள்ள மின் இணைப்புகளில் இருந்து பெறப்பட்ட மின்சாரத்தைப் பயன்படுத்தி அங்கீகரிக்கப்படாத பிட்கொய்ன் நடவடிக்கைகளை அக்கும்பல் நடத்தி வந்ததாக நம்பப்படுகிறது. கங்காரில், தாமான் ஸ்ரீ ஹர்தாமாஸில் நடந்த சோதனைகளில் மடிக்கணினிகள், கை தொலைபேசிகள் , மோடம்கள் மற்றும் தொடர்பு சாதனங்கள் உட்பட துணை உபகரணங்களுடன் 33 பிட்காயின் தயாரிப்பு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதவிர இதர ஆறு வளாகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் மொத்தம் 259 பிட்காயின் சாதனங்கள் , 59 கணினிகள் , ஐந்து மடிக்கணினிகள் உட்பட பல்வேறு மின்னணு உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



