
கோலாலம்பூர், ஜனவரி-13-மருத்துவமனையில், மலாய் தாதி ஒருவர் உடல் நலமின்றி இருக்கும் இந்திய முதியவருக்கு கையால் உணவு ஊட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
பார்ப்பதற்கு மீன் முள்ளோ, இறைச்சியில் உள்ள எலும்போ போல் இருக்கும் ஒன்றை எடுத்து தூரப் போட்டு விட்டு, பார்த்து பார்த்து கவனமாக நோயாளிக்கு அவர் ஊட்டி விடுகிறார்; உணவு கீழே சிந்தா வண்ணம் தாடைக்கருகே கையையும் அத்தாதி வைத்துக் கொள்கிறார்.
அந்தச் சிறிய செயலில் வெளிப்பட்ட அன்பும், மனிதநேயமும் வலைத்தளவாசிகளின் மனதை உருக்கியது.
அதனை “கடமை, அர்ப்பணிப்பு, பரிவு” எனப் புகழ்ந்த அவர்கள், இன, மத வேறுபாடுகளைத் தாண்டி மனிதநேயம் உயிர்ப்புடன் இருப்பதை இந்தக் காட்சி நிரூபித்ததாகக் கூறினர்.
சண்டை சச்சரவு, பிரிவினைவாதம் என எத்தனையோ எதிர்மறைச் செய்திகள் நிறைந்த உலகில், அன்பும் கருணையும் தான் மனிதகுலத்தை ஒன்றிணைக்கும் உண்மையான சக்தி என்பதை இது போன்ற நெகிழ்ச்சியான தருணங்கள் அவ்வப்போது நமக்கு மீண்டும் நினைவூட்டிச் செல்கின்றன.



