
கூலாய், ஜனவரி 14 -மலேசியாவில் சலுகை விலையில் வழங்கப்படும் RON95 பெட்ரோலை நிரப்புவதற்காக தனது காரின் எண் பலகையை மாற்றிய சிங்கப்பூர் ஓட்டுநருக்கு, கூலாய் நீதிமன்றம் இன்று 9,000 ரிங்கிட் அபராதத்தை விதித்துள்ளது.
சிங்கப்பூர் நிரந்தர குடியிருப்பாளரான அந்நபர் Volkswagen காரை ஓட்டிச் சென்றபோது, தனது வாகனத்தின் உண்மையான பதிவு எண்ணை மறைத்து, மலேசிய பதிவு எண்ணைப் போல காட்டி RON95 பெட்ரோலை நிரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த சம்பவம் கடந்த ஜனவரி 2 ஆம் தேதியன்று கூலாய் மாவட்டத்தில் உள்ள ஜோகூர் பாரு – ஆயர் ஹித்தாம் சாலையில் அமைந்துள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதையடுத்து நீதிமன்றத்தில் அவருக்கு அபராதம் விதிக்கபட்டது. அபராதம் செலுத்தத் தவறினால், ஒன்பது மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும் உத்தரவிடப்பட்டது.



