
ஷா ஆலம், ஜனவரி 20 -சிலாங்கூர் மாநிலத்தில் Bandar Pintar எனப்படும் அறிவார்ந்த நகர திட்டத்தின் முயற்சிகளை வலுப்படுத்த 450 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC மூலம் வழங்கப்படுகிறது.
அமைச்சர் Datuk Fahmi Fadzil, மாநில அரசு கோரிய 350 மில்லியன் ரிங்கிட்டை விட அதிகமாக இந்த ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஒருங்கிணைந்த தரவுகள் மற்றும் அறிவார்ந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நகர திட்டமிடல், நிர்வாகம் மற்றும் கொள்கை முடிவுகளை மேலும் துல்லியமாக்குவது இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் என்றார்.
இந்த திட்டம் சிலாங்கூரின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்து, புதுமைகளை அதிகரிப்பதுடன், மாநிலத்தை முக்கிய முதலீட்டு இலக்காக மாற்றும் என்றும் அவர் கூறினார்.
இன்று அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்த கையெழுத்து நிகழச்சி சிலாங்கூர் சுல்தான் Sultan Sharafuddin Idris Shah மற்றும் ராஜா மூடா Tengku Amir Shah ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
இப்புரிந்துணர்வின் கீழ் மூன்று முக்கிய துறைகளில் கவனம் செலுத்தப்படுகிறது:
அறிவார்ந்த இணைப்புத் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு, பொது பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மை, விவேக வெள்ள மேலாண்மை ஆகியவை அதில் உள்ளடங்கும்.
7.4 மில்லியன் மக்கள் தொகையுடன் அதிக மக்கள் வசிக்கும் மாநிலமாக உள்ள சிலாங்கூர், 96.9 விழுக்காடு 5G இணைப்பை எட்டியுள்ளதால், நாட்டின் 5G முன்னணி மாநிலமாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



