
அலோர் ஸ்டார், ஜனவரி-25 – கெடாவில் SOSMA சட்டத்தின் கீழ் கைதுச் செய்யப்பட்ட 16 வயது சிறுமி விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஜனவரி 14‑ஆம் தேதி ஜித்ரா டோல் சாவடி அருகே போலீஸார் தடுத்து நிறுத்திய வாகனத்திலிருந்த தனது தந்தை மற்றும் சிலரோடு அப்பெண் கைதானார்.
அந்த வாகனம் வெளிநாட்டுத் தொழிலாளர்களை கடத்த பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டது.
எனினும் மகளுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்றும், ஒரு பயணியாகவே காரில் தந்தையுடன் சென்றதாகவும் கூறி அவரின் தாயார் மறுநாள் போலீஸில் புகார் செய்தார்.
தடுத்து வைக்கப்பட்ட மகள் வாந்தி, தோல் ஒவ்வாமை போன்ற உடல்நலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டும், மன உளைச்சலுக்கு ஆளாகியும் இருப்பதால் உடனடியாக அவரை விடுவிக்க வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
மனித உரிமை அமைப்பான SUARAM-மும் அப்பெண்ணின் உடனடி விடுதலையை வலியுறுத்தி, குழந்தைகள் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தது.
உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயிலும் இந்த வழக்கை ஆய்வு செய்வதாக கூறினார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மகள் விடுவிக்கப்பட்டதை அவரின் தாயார் உறுதிப்படுத்தினார்.
“என் மகள் இப்போது வீட்டில் பாதுகாப்பாக இருப்பது எனக்கு நிம்மதி அளிக்கிறது” என அவர் தெரிவித்தார்.



