
வாஷிங்டன், பிப்ரவரி-3-அமெரிக்க – இந்திய வர்த்தக உறவில் திருப்புமுனையாக, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் இந்திய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரியை 50 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காட்டுக்குக் குறைத்துள்ளார்.
இந்தியா தனது சுங்கத் தடைகளை முழுமையாக நீக்க ஒப்புக் கொண்டதன் பலனாக இது சாத்தியமாகியுள்ளது.
குறிப்பாக ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த பிரதமர் நரேந்திர மோடி ஒப்புக் கொண்டதால், ட்ரம்ப் ‘இறங்கி வந்துள்ளார்’.
இனி அமெரிக்காவிடமிருந்தோ அல்லது வெனிசுவலாவிடமிருந்தோ இந்தியா எண்ணெய் கொள்முதல் செய்யக் கூடும்.
மோடியுடன் தொலைப்பேசியில் பேசியப் பிறகு வாஷிங்டனில் ட்ரம்ப் இதனை அறிவித்தார்.
அமெரிக்க – இந்திய வாணிப உடன்பாட்டின் ஒருபகுதியாக 500 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் விவசாயப் பொருட்களையும் இனி அமெரிக்காவிலிருந்து வாங்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது.
இரு தலைவர்களுமே இந்த ஒப்பந்தத்தை நட்பு மற்றும் ஆழமான ஒத்துழைப்பின் அடையாளமாகக் கூறியுள்ளனர்.
இவ்வொப்பந்தம், வர்த்தகப் போக்கை மாற்றி, அமெரிக்க ஏற்றுமதியை உயர்த்துவதோடு இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பையும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதால் இந்தியப் பொருட்கள் மீதான பரஸ்பர வரியை 25 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காட்டுக்கு உயர்த்தி கடந்தாண்டு ட்ரம்ப் அதிரடி காட்டினார்.
இதனால் இரு தரப்புக்கும் இடையிலான உறவில் கசப்பு ஏற்பட்டது.
தற்போது அது தீர்க்கப்பட்டுள்ளதால் அமெரிக்கா–இந்தியா உறவில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது.



