
ஜகர்த்தா, ஜூன்-19 – காடுகளில் எஞ்சியிருக்கும் கடைசி போர்னியோ காண்டாமிருகத்தை பிடித்து செயற்கைக் கருத்தரிப்பு மூலம் அந்த இனத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் இந்தோனேசிய அரசாங்கம் தீவிரமாக முயன்று வருகிறது என அந்நாட்டின் அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
உலகில் தற்போது இரண்டு போர்னிய காண்டாமிருகங்கள் மட்டுமே இருப்பதாக அறியப்படுகிறது.
பெண் காண்டாமிருகங்களான அவையிரண்டில் ஒன்று இந்தோனேசியாவின் கெலியன் காண்டாமிருக சரணாலயத்தில் உள்ள Pahu, மற்றொன்று Kutai Kartanegara வட்டாரத்திலுள்ள காடுகளில் வாழும் Pari யாகும்.
போர்னியா காண்டாமிருகங்கள், சுமாத்ரா காண்டாமிருகங்களின் ஒரு துணையினமாகும்.
அவை கலப்பினம் செய்து, போர்னிய வம்சாவளியின் சில மரபணுப் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் அளவுக்கு நெருங்கிய தொடர்புடையவை என அதிகாரிகள் நம்புகின்றனர்.
கண்காணிப்பு கேமராக்களால் எடுக்கப்பட்ட படங்களில் Pahu வைவிட இளமையாகத் தோன்றும் Pari மீதுதான் கடைசி நம்பிக்கை உள்ளது.
பாதுகாப்பு ஆர்வலர்கள், அதைப் பிடிப்பதற்குத் தயாராவதற்கும், குழிப் பொறிகளை நிறுவுவதற்கும், சோதனை ஓட்டங்களை நடத்துவதற்கும் பல மாதங்களைச் செலவிட்டுள்ளனர்.
காண்டாமிருகங்களை இடமாற்றம் செய்வது ஒரு அபாயகரமான செயல்முறையாகும், மேலும் இது கடந்த காலங்களில் இந்த முயற்சி இந்தோனேசியாவில் பேரழிவில் முடிந்துள்ளது.



