
கோத்தா கினபாலு, ஆகஸ்ட் 4 – கோத்தா கினாபாலுவில் வாகன ரிம் திருட்டில் ஈடுபட்டதாக நம்பப்படும் ‘ஆண்டி கும்பல்’ போலீசாரால் முறியடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 30 மற்றும் 31ஆம் தேதிகளில் புதாத்தான், பெனாம்பாங் மற்றும் பாப்பார் (Putatan, Penampang & Papar) பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில், 30 முதல் 38 வயதுக்குட்பட்ட நான்கு ஆண்கள் கைது செய்யப்பட்டனர். இந்த கும்பல் குறைந்தது 10 ரிம் திருட்டு வழக்குகளில் தொடர்புடையதாக போலீசார் தெரிவித்தனர்.
சோதனைகளில் ஒரு பெரோடுவா மைவி கார், திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கருவிகள், 21 வாகன ரிம்கள், மேலும் திருடப்பட்டதாக நம்பப்படும் இரண்டு மைவி ரிம்கள் உள்ளிட்ட சுமார் 20,000 ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நடவடிக்கையின் மூலம் தஞ்சோங் ஆரு, லுயாங், இனானாம், கரம்புனாய் மற்றும் மெங்காத்தால் (Tanjong Aru, Luyang, Inanam, Karambunai & Menggatal) ஆகிய பகுதிகளில் பதிவான 10 ரிம் திருட்டு வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட அனைவருக்கும் குற்றப் பின்னணி மற்றும் போதைப்பொருள் தொடர்பான பதிவுகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.



