
கோலாலம்பூர், ஆகஸ்ட் 4– ம.இ.காவின் 80-வது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தையொட்டி, நாடு தழுவிய அளவில் பிரம்மாண்டமான பேச்சுப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் சுமார் 30,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதிலும் 123 தொகுதிகளில் தமிழ், மலாய் என இரு மொழிகளில் இப்போட்டி நடைபெறவிருக்கிறது. தொடக்கப்பள்ளி (ஆண்டு 1 முதல் 6 வரை), இடைநிலைப்பள்ளி (படிவம் 1 முதல் 5 வரை) மற்றும் திறந்த பிரிவு என 3 முதன்மைப் பிரிவுகளாக இப்போட்டி நடத்தப்படும். திறந்த பிரிவில் STPM மாணவர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் பங்கேற்கலாம் என ம.இ.கா உதவித் தலைவர் Dato T.Murugiah தெரிவித்தார்.
மலேசிய இந்திய சமுதாயத்திற்கு முன்னாள் தேசியத் தலைவர் துன் சாமிவேலு ஆற்றிய பங்களிப்பு, சமுதாய வளர்ச்சி, தலைமைத்துவம் மற்றும் தேசிய ஒற்றுமை ஆகியவற்றை மையமாகக் கொண்ட தலைப்புகள் அப்போட்டியில் வழங்கப்பட்டுள்ளன. இந்தியர்கள் தவிர்த்து மலாய் மற்றும் சீன இனத்தவர்களும் அப்போட்டியில் பங்கேற்கலாம்.
இதனிடையே நேதாஜி மண்டபத்தில் Nagaiah Velu தலைமையில் நடைபெறவுள்ள இப்போட்டியை, மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ SA விக்னேஸ்வரன் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைப்பார். வெற்றி பெறுவோருக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.
கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ அனுமதியுடன் நடத்தப்படும் இப்போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் மூலம் அவர்களின் புறப்பாட நடவடிக்கைக்கான (PAJSK) புள்ளிகள் கிடைக்கும். போட்டியில் பங்கேற்க விரும்புவோர் வரும் வெள்ளிக்கிழமைக்குள் தங்கள் பகுதியில் உள்ள ம.இ.கா கிளைகளைத் தொடர்பு கொண்டு பதிந்து கொள்ளலாம்.



