Latestமலேசியா

கிளாந்தானில் யானை தாக்கியதில் ரப்பர் தோட்டத் தொழிலாளி காயம்

கிளாந்தான், செப்டம்பர் 18 – ரப்பர் தோட்டத்திற்குச் சென்று கொண்டிருந்த 67 வயதான ரப்பர் பால் சேகரிப்பாளர் ஒருவர், காட்டு யானை தாக்கியதில் காயமடைந்தார். இச்சம்பவம் புதன்கிழமை காலை கிளாந்தான் கம்போங் லத்தா ஜாங்குட், பத்து மெலிந்தாங் (Kampung Lata Janggut, Batu Melintang) பகுதியில் நிகழ்ந்தது.

காலை சுமார் 9 மணியளவில் தோட்டத்திற்குச் செல்லும் பாதையில் யானை நிற்பதைக் கண்ட பாதிக்கப்பட்ட நபர், உடனடியாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி திரும்பிச் செல்ல முயன்றுள்ளார். எனினும், திடீரென அவரை நோக்கி வேகமாக வந்த யானை, மோட்டார் சைக்கிளுடன் அவரை முட்டித் தள்ளியதுடன், தொடர்ந்து தாக்கவும் முயன்றது.

யானையிடமிருந்து தற்காத்துக்கொள்ள அவர் போராடிய நிலையில், சிறிது நேரத்திற்குப் பின்னர் அந்த யானை அருகிலுள்ள காட்டிற்குள் சென்றது. பின்னர் கிராம மக்கள் அவரை மீட்டு, ஜெலி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு சென்றனர். தாக்குதலில் அவரது தலையில் காயம் ஏற்பட்டு மூன்று தையல்கள் போடப்பட்டதுடன், இடது கன்னத்தில் காயமும் வலது மணிக்கட்டில் சுளுக்கும் ஏற்பட்டது.

இதனிடையே, அப்பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட யானைகள் நடமாடுவதால் கிராம மக்கள் அச்சத்தில் இருப்பதாக சுங்கை லோங் முக்கிம் (Mukim Sungai Long) தலைவர் வான் அஸ்மான் வான் மூசா (Wan Azman Wan Musa) தெரிவித்தார். யானைகள் குடியிருப்புகளுக்கு அருகிலுள்ள ரப்பர் தோட்டங்களுக்குள் உணவு தேடி வருவதால், குறிப்பாக அதிகாலை நேரங்களில் தோட்டங்களுக்குச் செல்லும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா பாதுகாப்புத் துறையான பெர்ஹிலித்தானிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!