
கோலாலம்பூர்- முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் வீட்டுக் காவலில் வைக்கப்படுவார் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, அவர் தமது இல்லத்திற்குத் திரும்பி மனைவி டத்தின் ஸ்ரீ ரோஸ்மா மன்சோருடன் தங்குவார் எனச் சமூக ஊடகங்களில் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
ஆனால், ‘வீட்டுக் காவல்’ என்பது நஜிப் கட்டாயமாகத் தமது சொந்த வீட்டில்தான் தங்க வேண்டும் என்பதைக் குறிக்காது எனச் சட்ட மற்றும் குற்றவியல் நிபுணர்கள் விளக்குகின்றனர்.
அவர் தங்க வேண்டிய இடத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் சிறைத்துறையும் தீர்மானிக்கலாம். அது அவரது சொந்த வீடாக இருக்கலாம்; அல்லது பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் நிர்வாகத் தேவைகளுக்கு ஏற்ற வேறொரு குறிப்பிட்ட இடமாகவும் இருக்கலாம்.
வீட்டுக் காவலில் இருந்தாலும், நஜிப் சுதந்திரமாக வெளியே செல்லவோ, விரும்பியவர்களைச் சந்திக்கவோ முடியாது. அவர் தங்கும் இடம் சிறைச்சாலையைப் போன்று கடுமையான கட்டுப்பாட்டில் இருக்கும். காவலர்கள், கண்காணிப்புக் கருவிகள், வருகையாளர்களுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் வெளித் தொடர்புகள் மீதான நிபந்தனைகள் அமல்படுத்தப்படலாம்.
நஜிப், எஞ்சிய தண்டனைக் காலத்தை 2028 ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை வீட்டுக் காவலில் கழிக்க, 5 கோடி ரிங்கிட் அபராதத்தை முழுமையாகச் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே, சமூக ஊடகங்களில் கூறப்படுவதுபோல் நஜிப் உடனடியாக ரோஸ்மாவுடன் வீட்டில் தங்குவார் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படாத ஊகமே. அவரது வீட்டுக் காவல் எங்கு, எந்தக் கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தப்படும் என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பிறகே தெளிவாகும்.



