Latestமலேசியா

ஓய்வுக்காலத்திற்கு EPF சேமிப்பு போதாது; எச்சரிக்கும் புதிய ஆய்வு

கோலாலாம்பூர், பிப் 3 – மலேசியர்களின் ஓய்வுக்கால சேமிப்பு இனி போதாது என புதிய ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

ஊழியர் சேமநிதி வாரியமான EPF சந்தாத்தாரர்களில் பெரும்பாலோர் ஓய்வுக்காலத்தில் RM100,000 க்கும் குறைவான தொகையுடன் வாழ வேண்டிய நிலை உள்ளதே அதற்குக் காரணம்.

தற்போது, 74 விழுக்காட்டினர் RM100,000 க்கும் குறைவான சேமிப்புடனேயே ஓய்வு பெறுகின்றனர்.

இந்தத் தொகை, ஒருவருக்கு சுமார் 5 ஆண்டுகள் மட்டுமே போதுமானதாக உள்ளது; இதுவே தம்பதிகள் என்றால் 3 முதல் 4 ஆண்டுகள் வரை மட்டுமே அத்தொகை மிஞ்சும்.

இதனை மாதம் வாரியாகக் கணக்கிட்டால், ஒரு தனிநபருக்கு மாதம் RM1,500 அல்லது தம்பதிகளுக்கு RM2,500 மட்டுமே வரும். இது, நாட்டின் குறைந்தபட்ச சம்பளமான RM1,700-ரை விட குறைவானதாகும்;

EPF, RM650,000-ட்டை ஓய்வுகாலத்திற்கு போதுமான சேமிப்பு என்றும், RM1.3 மில்லியனை மேம்பட்ட சேமிப்பு என்றும் வரையறுத்துள்ளது.

ஆனால் மலேசியர்களின் ஓய்வுக்கால சேமிப்பு போதுமானதா என்பதை மதிப்பீடு செய்யும் புதிய RIA அமைப்பின் படி, மலேசியர்கள் ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ RM1.3 முதல் RM1.5 மில்லியன் வரை தேவைப்படும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

குறைந்த ஊதியம், வீடு-உணவு-போக்குவரத்து உள்ளிட்ட அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினங்கள், மற்றும் மருத்துவச் செலவுகள் ஆகியவை சேமிப்புக்கு மேலும் அழுத்தம் தருகின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக, மலேசியர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வதாலும், சேமிப்பு விரைவில் கரைந்து விடுகிறது.

ஏராளமானோர் பணி ஓய்வுப் பெற்ற 5 முதல் 7 ஆண்டுகளிலேயே EPF சேமிப்பை முழுமையாகச் செலவழித்து விடுவார்கள்.

இதனால், அவர்கள் குடும்பத்தார் அல்லது அரசாங்க உதவியை நம்ப வேண்டிய நிலை ஏற்படுகிறது.

ஆக, சரியான திட்டமிடல் இல்லையென்றால், பல தசாப்தங்களாகச் சேமித்து வைத்த EPF பணம் ஒருவரின் ஓய்வுக்கால தேவைகளுக்கு போதுமானதாக இருக்காது என்பது புலப்படுகிறது.

எனவே, ஓய்வுக்கால பாதுகாப்புக்கான கொள்கை மாற்றங்கள், நிதி திட்டமிடல் மற்றும் விழிப்புணர்வு அவசியத்தை இப்புதிய ஆய்வு வலியுறுத்துகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!