
பெட்டாலிங் ஜெயா: பி.கே.ஆர். துணைத் தலைவரான நூருல் இஸ்ஸா அன்வார், அடுத்த வாரம் நடைபெறவுள்ள கட்சியின் தேசிய மாநாட்டுக்குப் பிறகு தனது பொறுப்புகளில் இருந்து தற்காலிக ஓய்வு (Sabbatical) எடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை உறுதிப்படுத்திய பி.கே.ஆர். தகவல் தொடர்புத் தலைவர் ஃபஹ்மி ஃபட்ஸில், நூருல் இஸ்ஸா உண்மையில் துணைத் தலைவர் பதவியிலிருந்து முழுமையாக விலக விருப்பம் தெரிவித்திருந்ததாகக் கூறினார். எனினும், கட்சியின் மத்திய தலைமை அவரது ராஜினாமா கோரிக்கையை ஏற்காமல், தற்காலிக விடுப்பை வழங்க முடிவு செய்ததாக தெரிவித்தார்.
“ஆகஸ்ட் 14ஆம் தேதி நடைபெறும் மகளிர் பி.கே.ஆர். மற்றும் இளைஞர் (AMK) மாநாடுகளை நூருல் இஸ்ஸாதான் தொடக்கி வைக்கிறார்,” என்று ஃபஹ்மி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், பி.கே.ஆர். துணைத் தலைவர் பொறுப்புகளை இடைக்கால அடிப்படையில் கட்சியின் துணைத் தலைவரும் உள்துறை அமைச்சருமான சைஃபுடின் நசூத்தியோன் இஸ்மாயில் மேற்கொள்வார் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, கட்சியின் மற்றொரு துணைத் தலைவரான அமிருடின் ஷாரி, தேர்தல் இயக்குநர் பொறுப்பை முழுமையாக ஏற்கிறார். இதற்கு முன்பு, அமிருடினும் சைஃபுடினும் இணைந்து தேர்தல் இயக்குநர்களாக செயல்பட்டு வந்தனர்.
கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற கட்சித் தேர்தலில், அப்போது துணைத் தலைவராக இருந்த ரஃபிஸி ரம்லியை தோற்கடித்து நூருல் இஸ்ஸா பி.கே.ஆர். துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
அதன்பின்னர், ரஃபிஸி ரம்லியும் முன்னாள் துணைத் தலைவர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட்டும் பி.கே.ஆரை விட்டு வெளியேறி, ‘பெர்சாமா’ எனும் புதிய கட்சியை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.



