
கோலாலம்பூர், பிப்ரவரி-5-மலேசிய இந்தியர் மக்கள் கட்சியான MIPP, பிப்ரவரி 7-ஆம் தேதி கோலாலம்பூர் SOGO வளாகம் அருகே நடைபெறவுள்ள Himpunan Gerakan Anti Rumah Anutan Haram பேரணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து 2 அதிகாரப்பூர்வ கடிதங்களை வெளியிட்டுள்ளது.
முதல் கடிதம், தேசிய போலீஸ் தலைவர் மற்றும் பிற அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதில், இந்தக் கூட்டம் ‘சட்டவிரோதமாகக்’ கட்டப்பட்டதாகக் கூறப்படும் வழிபாட்டு இடங்களை குறிவைத்து நடத்தப்படுவதால், மதங்களுக்கு இடையேயான பதற்றம், பொது மக்களின் பாதுகாப்பு அச்சுறுத்தல், தேசிய ஒற்றுமை பாதிப்பு, சட்ட மற்றும் நிர்வாக சிக்கல்கள், வெறுப்பைக் கக்கும் பேச்சுகள் போன்ற அபாயம் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது கடிதம், BERSATU தலைவர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின் மற்றும் PAS தலைவர் தான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதில், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பது கூட்டணியின் பெயரைக் கெடுக்கும், மக்களின் நம்பிக்கையை குறைக்கும், அரசியல் நிலைத்தன்மையை பாதிக்கும் என MIPP தலைவர் பி.புனிதன் சுட்டிக் காட்டியுள்ளார்.
தவிர, பிப்ரவரி 7-ஆம் தேதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மலேசியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்வதால், அந்நாளில் நடைபெறும் எந்தவொரு ‘கலவரமும்’ அனைத்துலக அளவில் நாட்டின் புகழுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்தார்.
மதம் மற்றும் அரசியல் தொடர்பான பிரச்னைகள் சட்டப்பூர்வமான வழிகளில் தீர்க்கப்பட வேண்டுமே தவிர, இதுபோன்ற பேரணிகளால் அல்ல என வலியுறுத்திய புனிதன், மலேசியாவின் பன்முக சமூகத்தில் அமைதி, ஒற்றுமை மற்றும் மத மரியாதையை காக்கும் MIPP-யின் கடப்பாட்டை மறுஉறுதிப்டுத்தினார்.
சர்ச்சைக்குரிய சுயேட்சை சமய சொற்பொழிவாளர் சாம்ரி வினோத் தலைமையில் நூறுக்கும் மேற்பட்ட அரசு சார்பற்ற அமைப்புகள் இந்தப் பேரணியில் பங்கேற்கின்றன.
உணர்ச்சிப்பூர்வமான விஷயத்தை சட்டத்திடம் விடாமல், தான்தோன்றித் தனமாக பேரணிக்கு ஏற்பாடு செய்வது சமய – சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்குப் என பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.



