
Malaysia Star Singers – சீசன் 6; இளம் குரல்களை தேசிய மேடைக்கு உயர்த்தும் இசைப் போட்டி
கோலாலம்பூர், பிப்ரவரி 16 –
மலேசிய இந்திய சமூகத்தின் இளம் குரல்களுக்கு தேசிய மேடை அமைத்துக் கொடுக்கும் நோக்கில் மலேசிய இந்தியர் பொதுநலக் கழகம் (PPMIM) அமைப்பு நடத்தும் “Malaysia Star Singers – Season 6” இசைப் போட்டி இவ்வாண்டு மேலும் விரிவடைந்து, ஏழு மாநிலங்களைத் தழுவிய பெரிய இசை விழாவாக உருவெடுத்துள்ளது.
மலாக்காவில் தொடங்கிய இந்த முயற்சி இன்று தேசிய அளவில் வளர்ந்து, நாட்டின் பல பகுதிகளில் உள்ள மாணவர்களின் இசைத்திறமைகளை ஒன்றிணைக்கும் மேடையாக மாறியுள்ளது என்று மலேசிய இந்தியர் பொதுநலக் கழகத்தின் இயக்குனர் A.K குமார் தெரிவித்தார்.
கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களில்,இம்மாதம் முதல் மாநிலத் தேர்வுகள் நடைபெறுகின்ற நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரே நாளில் முதல்கட்டத் தேர்வும் அரையிறுதி சுற்றும் நடத்தப்படவுள்ளது.
இந்தப் போட்டி 8 முதல் 12 வயதுடைய தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாமல் அனைத்து ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கும், முதன்முறையாக 13 முதல் 18 வயதுடைய இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறு வயதிலேயே இசைத்திறனை வளர்த்துக் கொண்டு தன்னம்பிக்கையுடன் மேடையேற இந்தப் போட்டி ஒரு சிறந்த வாய்ப்பாக திகழ்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் இரு பிரிவிலிருந்து தலா மூன்று பேர் தேர்வு செய்யப்படுவதால், மொத்தம் 42 இளம் பாடகர்கள் தேசிய இறுதிப்போட்டிக்குத் தேர்ச்சி பெறவுள்ளனர்.
போட்டியாளர்கள் தங்கள் மாநிலத்திலேயே கலந்து கொண்டு பழைய தமிழ் திரைப்படப் பாடல்களைத் தேர்ந்தெடுத்து பாட வேண்டும் என்றும் முதல்கட்டத் தேர்வில் இசையின்றி குரல் திறன் மதிப்பிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பின்னர் நடைபெறும் சுற்றுகளில் minus one இசையுடன் பாட அனுமதி வழங்கப்படும்.
மாநிலங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட இளம் கலைஞர்கள் இரண்டு மாத இடைவெளிக்குப் பின்னர் நடைபெறும் தேசிய இறுதிப்போட்டியில் பங்கேற்பார்கள். கோலாலம்பூரில் ஆகஸ்ட் 29 அன்று நடைபெறவுள்ள இந்த மாபெரும் நிகழ்வில், போட்டியாளர்கள் தாங்கள் விரும்பிய பாடலைத் தேர்ந்தெடுத்து பாடும் சுதந்திரம் பெறுவது, அவர்களின் தனித்துவத்தையும் கலைநயத்தையும் வெளிப்படுத்தும் சிறந்த வாய்ப்பாக அமையும்.
போட்டியின் பெருமையை எடுத்துக்காட்டும் வகையில் பரிசுத் தொகைகள் சிறப்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. முதல் பரிசை வெல்லும் போட்டியாளருக்கு 3000 ரிங்கிட் வழங்கப்படவுள்ள நிலையில் இரண்டாம் இடம் பெறுபவருக்கு 2000 ரிங்கிட்டும், மூன்றாம் இடத்துக்கு 1000 ரிங்கிட்டும், நான்காம் இடத்துக்கு 700 ரிங்கிட்டும் மற்றும் ஐந்தாம் இடத்துக்கு 500 ரிங்கிட்டும் வழங்கப்படவுள்ளன.
இறுதிப்போட்டிக்கு தேர்ச்சி பெற்று மேடையேறும் மற்ற போட்டியாளர்களின் முயற்சியையும் பாராட்டும் வகையில் அவர்களுக்கும் தலா 100 ரிங்கிட் வழங்கப்படவுள்ளது. இதனுடன், இறுதிப்போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் நினைவுச் சின்னமாக சான்றிதழ்கள், அழகிய கோப்பைகள் மற்றும் பரிசுப் பைகள் வழங்கப்படுகின்றன. மேலும் குறிப்பிடத்தக்க வகையில், போட்டிக்கான கோப்பைகளை Varsoresan நிறுவனம் அனுசரணையாக வழங்கி இந்நிகழ்விற்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்துகிறது.
இந்தப் போட்டியின் நடுவர் குழுவில் புகழ்பெற்ற இசை நிபுணர்கள் Dr. Sri Shanmuganathan, T.M. Suguna மற்றும் Sri Babu ஆகியோர் இணைந்து போட்டியாளர்களின் திறமைகளை மதிப்பீடு செய்யவுள்ளனர். கடந்த ஆண்டுகளில் பங்கேற்ற சிலர் Zee Tamil மற்றும் Vijay TV நிகழ்ச்சிகளுக்கான தேர்வுகளில் பங்கேற்றதோடு, சிலர் தங்களது சொந்த இசை ஆல்பங்களையும் வெளியிட்டு முன்னேறி வருகின்றனர்.
Tasly Marketing Malaysia தலைப்பு அனுசரணையாளராகவும், டத்தோ டாக்டர் ரவி பக்கிரிசாமி உள்ளிட்ட சமூக ஆதரவாளர்கள் இணைந்து இந்நிகழ்வை ஆதரிக்கின்றனர். மாநில கல்வித் துறை அனுமதி பெறப்பட்டுள்ளதுடன், கல்வி அமைச்சின் அங்கீகாரத்திற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் பதிவு கட்டணம் ஒருவருக்கு RM20 மட்டுமே என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இளம் குரல்களை ஊக்குவிக்கும் இந்த இசைப் பெருவிழாவிற்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தின் ஆதரவு முக்கியமானதாகும். மேலும் தகவல்களுக்கு 011-18898413 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
“உங்கள் குரல் உங்கள் கனவுகளை நனவாக்கும் – தேசிய மேடை உங்களை எதிர்நோக்குகிறது!”



