
மலேசியாவில் 85% காசநோய் சம்பவங்கள் உள்ளூர் மக்களை உட்படுத்தியவை: KKM தகவல்
புத்ராஜெயா, பிப்ரவரி-19,
மலேசியாவில் TB எனப்படும் காசநோய் கண்டவர்களில் 85 விழுக்காட்டினர் உள்ளூர் மக்களே என சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிஃப்ளி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டவர்கள் வெறும் 15 விழுக்காட்டினர் மட்டுமே என்றார் அவர்.
எனவே, காசநோய் பரவுவதற்கு புலம்பெயர்ந்தவர்களே காரணம் என்ற கருத்து தவறானது என அவர் சுட்டிக் காட்டினார்.
இந்நோய் மலேசியாவின் பொது சுகாதாரத்தில் நீண்டகாலமாக இருந்து வரும் தொற்று என்றும், சமூகத்தில் பரவாமல் தடுக்க அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதேசமயம், TB நோயாளிகளை ஒதுக்கி வைக்காமல் அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
அதன் மூலம், அவர்கள் முழுமையான சிகிச்சையை முடிக்க ஊக்குவிக்கப்படுவார்கள் என Dr சுல்கிஃப்ளி சொன்னார்.
இரு வாரங்களுக்கும் மேலான இருமல், காய்ச்சல், இரவில் வியர்த்துக் கொட்டுவது, உடல் எடையில் திடீர் சரிவு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை சென்று காண வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
புதிதாக 503 சம்பவங்களோடு சேர்த்து, இவ்வாண்டின் முதல் 5 வாரங்களில் நாட்டில் 2,571 காசநோய் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.



