ஜோர்ஜ்டவுன், பிப்ரவரி-23-“என் உலகமே அமைதியாகி விட்டது” என சொல்லாணா துயரத்தில் மூழ்கியுள்ளார் அன்பு மகன் இந்திரனைப் பிரிந்து துயரும் பினாங்கைச் சேர்ந்த 52 வயது தாய் உஷா.
அவரின் அந்த மூத்த மகன், குவாந்தான் ஆயுதப்படைப் பயிற்சித் தளத்தில் திடீரென மயங்கி விழுந்து அண்மையில் உயிரிழந்தார்.
ஒவ்வொரு நாளும் “காலை வணக்கம்” என செய்தி அனுப்பி, தாயின் உணவு, வாழ்க்கை குறித்து கவலைப்பட்ட மகன்…இன்று இல்லை.
ஆயுதப் படை வீரராக இருந்த கணவர் கயாம்புவும் 2016-ல் விமான விபத்தில் உயிரிழந்தபின், மகன் இந்திரன் தான் குடும்பத்தின் தூணாக இருந்தார்.
ஆனால் 22 வயதில் அவரின் வாழ்க்கைப் பயணம் முடிந்துள்ளது.
உஷாவுக்கு இந்த இழப்பு அளவிட முடியாதது.
ஆனால் மகன் தினமும் சொன்ன அன்பு வார்த்தைகள், அவர் மனதில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
இந்திரனின் சவப்பரிசோதனை அறிக்கை, துன்புறுத்தல் அல்லது பகடிவதை எதுவும் நடக்கவில்லை என உறுதிப்படுத்தியுள்ளது.
இவ்வேளையில், கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக், உஷாவின் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார்.
ஆறாம் வகுப்பு மாணவியான கடைசி மகள் மைத்ராஷினிக்கு கல்வி உதவி வழங்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.
உஷாவின் மற்ற குழந்தைகளான 21 வயது வர்ஷினி UMK பல்கலைக்கழகத்திலும், 17 வயது சர்வியன் கூலிம் PDRM MRSM கல்லூரியிலும் படித்து வருகின்றனர்.



